Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நிலவில் தண்ணீர் மற்றும் கனிமங்கள் பற்றி ஆராயும் சந்திராயன் 2
வரலாற்று திருப்புமுனையாக அமைந்த சந்திரயான்-1 என்ற இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டத்திற்கு பின், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான் - 2 நிலவுப் பயணம் மூலம் மீண்டும் வரலாறு படைக்கவுள்ளது. நிலவை நோக்கிய இந்தியாவின் இரண்டாவது பயணத்தின் சந்திரயான் - 2 விண்கலன், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்படவுள்ளது. சந்திரயான் - 2 விண்கலன் இதுவரை எந்தவொரு நாடு சென்றிராத நிலவின் தென்துருவ பிரதேசத்திற்கு செல்லவுள்ளது.
இந்தப் பிரதேசத்தில் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் அதிக ஆபத்துகளின் காரணமாக எந்த விண்வெளி நிறுவனமும் இந்த பிரதேசத்திற்கு கலன்களை இதுவரை அனுப்பவில்லை. இதற்கு முன்னால், நிலவுப் பயணத் திட்டங்கள் நிகழ்ந்துள்ள நிலவின் மத்தியரேகை பகுதி, ஓரளவு சமவெளி பகுதியாகும். ஆனால், நிலவின் இந்த தென் பகுதி முழுவதும் பள்ளங்களும், கடினமான நிலப்பரப்பும் காணப்படுகின்றன. எனவே, இவ்விடத்தில் ஏற்படும் ஆபத்துகளும் கணிசமாகவே இருக்கின்றன.
நிலவின் மேற்பரப்பில் சுமூகமாக, மெதுவாக தரையிறங்கி, ரோபோ ஊர்தியை அந்நிலப்பரபில் இயக்குகின்ற திறனை சோதனை செய்து பார்ப்பதே இந்த நிலவுப் பயணத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். நிலவின் மேற்பரப்பு, கனிமவியல், மிகுதியாக கிடைக்கும் தனிமங்கள், நிலவின் வெளிப்புறப்பகுதியில் ஆய்வு மற்றும் ஏதாவதொரு வடிவத்தில் அங்கு நீர் உள்ளதா என அறிந்து கொள்ளுதல் போன்றவை இந்தத் திட்டத்தின் அறிவியல் ஆய்வு நோக்கங்களாக உள்ளன.
முன்னாள் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக நிலவின் சுற்றுவட்ட பாதையில், அதன் மேற்பரப்பில், நிலவின் வளிமண்டலத்தில் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் நான்காவது நாடாக இந்தியா மாறும். மனித குலத்திற்கு நன்மை பயக்கும் நிலவு பற்றிய நமது புரிதலையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்துவதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
சந்திரயான்-2 நிலவுப் பயணத் திட்டம் இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட சந்திரயான்-1 திட்டத்தை தொடர்ந்து வருவதாகும். சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனால், நிலவில் தண்ணீர் தோன்றியது, அதன் மேற்பரப்பில், மேற்பரப்புக்கு அடியில், நிலவின் வெளிபுறத்தில் தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை விளக்குவதற்கு மேலதிகமான ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது.
சந்திரயான்-2 இல் இருக்கின்ற சுற்றுவட்ட கலன், தரையிறங்கும் கலன் (இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் பெயரில் இதற்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது) மற்றும் ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர் (பெயர் - பிரக்யான்) அனைத்தையும் இஸ்ரோ உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலவுப் பயணத் திட்டம் சுற்றுவட்ட கலனை நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும். விக்ரம் என்கிற தரையிறங்கும் கலன் நிலவின் தென்பகுதியில் சுமூகமாக, மெதுவாக தொலை கட்டுப்பாட்டுடன் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்.
மேசினுஸ் சி (Manzinus C) மற்றும் சிம்பிலியுஸ் என் (Simpelius N) என்கிற இரண்டு பள்ளங்களுக்கு இடையில் இருக்கும் உயர்ந்த ஒரு சமவெளியின் மேற்பரப்பில், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி நிலவின் தென்துருவத்திற்கு அருகில் இந்த தரையிறங்கும் கலன் இறங்கும். பூமியில் 14 நாட்களுக்கு (நிலவில் ஒரு நாள்) சமமான காலம், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் இந்த ரோபோ ஊர்தி, ஆய்வுகளை மேற்கொள்ளும். சுற்றுவட்ட கலன் ஓராண்டு பணிகளை மேற்கொண்டு செயல்படும்.
இந்தியாவால் உருவாக்கப்பட்ட 640 டன் ஜிஎஸ்எல்வி எம்கே-III ஏவுகலன், 3,890 கிலோகிராம் எடையுடைய சந்திரயான் -2ஐ விண்ணில் ஏவுகின்றது. 13 இந்திய அறிவியல் கருவிகளையும் (எட்டு கருவிகள் சுற்றுவட்ட கலனிலும், 3 கருவிகள் தரையிறங்கும் கலனிலும், 2 கருவிகள் ரோவர் ஊர்தியிலும்) நாசாவின் ஒரு கருவியையும் இந்த ஏவுகலன் சுமந்து செல்கிறது.
அறிவியல் துறைக்கு அப்பாற்பட்டு, அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ அடையாளத்தின் முத்திரையை சந்திரயான்-2 நிலவில் பதிக்கும். இந்த ரோவர் ஊர்தி சக்கரத்தின் ஒரு பக்கம் அசோக சக்கரமும், அடுத்தப்பக்கம் இஸ்ரோ-வின் அடையாளமும் இருப்பதாக இஸ்ரோவின் தலைவர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த ரோவர் ஊர்தி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லுகிறபோது, இவற்றின் அடையாளங்கள் நிலப்பரப்பில் பதியும்.
தென்துருவத்திற்கு அருகில் தரையிறங்குவது ஏன்?
ஆபத்து நிறைந்ததாக இருக்கிறபோது, நிலவின் தென்துருவத்தில் இந்த கலன் ஏன் தரையிறங்க வேண்டும்? நிலவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பயணங்களில் துருவப்பகுதிகள் முக்கியமாக இருப்பது ஏன்? என்ற கேள்விகள் எழலாம். நிலவின் தென்துருவ பகுதி இதுவரை ஆய்வு செய்யப்படாத இடமாகும். ஆய்வுக்கு ஆர்வமூட்டுவதாகவும், புதியவற்றை கண்டுபிடிக்கும் வாய்ப்பை வழங்குவதாகவும் இது உள்ளது. இந்த பகுதியின் விரிவான நிலப்பரப்பு சூரிய ஒளி விழாமல் இருப்பதோடு, மிகவும் குளிரான சூழ்நிலையில் சூரிய கதிர்வீச்சு குறைவினால் ஏற்படும் விளைவுகளோடும் காணப்படுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழாத இடத்தில் நீரும், தாதுக்களும் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
நிலவின் சுற்றுவட்ட பாதையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மனிதர்கள் சென்று வாழ உகந்த இடங்களில் ஒன்றாக நிலவின் தென்துருவத்தை உருவாக்குவதற்கு இங்கு நீர் இருப்பதாக தோன்றுவது அதிக பயனுள்ளதாக அமைகிறது, பூமிக்கு வெளியே மனித குடியேற்றம் நடப்பதற்கு குறைந்தது நூறு ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார் ஸ்டீபன் ஹாகிங் சூரிய குடும்பத்தின் பெரிய அளவில் தாக்கம் ஏற்படக்கூடிய ஐட்கன் பள்ளத்தாக்கின் விளிம்பில் நிலவின் தென்துருவம் உள்ளது. நிலவின் மேலோட்டில் காணப்படக்கூடிய பொருட்களால் இப்பகுதியின் மேற்பரப்பு உருவாகியுள்ளது.
இந்த பொருட்களை ஆய்வு செய்வதன் மூலம், நிலவு தோன்றியது பற்றிய தகவல்களும், நிலவிற்கு மேற்கொள்ளப்படும் எதிர்கால பயணத் திட்டங்களில் இதனை பயன்படுத்தப்படும் வாய்ப்புக்களும் வெளிப்படலாம். விண்வெளிக்கு செல்லாமல் இருந்தால், மனிதகுலத்திற்கு எதிர்காலம் இல்லை என்று நினைக்கிறேன்", என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை தெரிவித்திருந்தார்.
விண்வெளியிலுள்ள எல்லா கிரகங்களிலும், நிலவு நமக்கு மிகவும் அருகில் இருப்பதால், விண்வெளி பயணத்திட்டங்களில் பயன்படுத்துகின்ற தொழில்நுட்பங்களை சோதித்து பார்க்கின்ற இடமாக இது உள்ளது. பூமியின் தொடக்கக் கால வரலாற்றுக்கு சிறந்த தொடர்பை வழங்குவதாக நிலா உள்ளது. சூரிய குடும்பத்தின் உள்ளக சுற்றுச்சூழலின் வரலாற்று பதிவை நிலா வழங்குகிறது. எனவேதான் நிலவின் மீது கவனம் மீண்டும் திரும்பியுள்ளது.
இந்த கட்டுரையை எழுதிய ரமேஷ் ஷிஷூ, அமெரிக்காவின் டெட்ராய்ட் பல்கலைக்கழகத்தில் 1972ம் ஆண்டு ரசாயன பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். கல்வி மற்றும் கார்பரேட் துறையில் 42 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் இரண்டு டஜன் தொழில்நுட்ப ஆய்வுகளையும், அறிக்கைகளையும், ‘Travel Beyond the Earth ̶ Reaching the Moon’ என்ற அறிவியல் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.
(நன்றி: பிபிசி தமிழ்)
Add new comment