Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வலி நிவாரண மாத்திரை சாப்பிடுபவர்களே கவனமாயிருங்கள்
கடந்த ஆண்டு ஒரு நாள் இரவு, படுக்கையில் என் காதலனுக்கு அருகே படுத்திருந்தேன். அவன் நன்கு தூங்கட்டும் என காத்திருந்தேன். அவன் தூங்கியதும், நான் சாய்ந்து படுக்கையில் அவனுடைய பக்கத்தில் இருந்த எனது கைப்பையை எடுத்து, சக்தி மிக்க வலி நிவாரணியான co-codamol மாத்திரைகள் உள்ளனவா என்று பரபரப்பாக தேடினேன். அந்த சப்தத்தால் அவன் எழுந்து கொண்டான். "படுப்பதற்குமுன் மாத்திரை எடுத்து கொண்டாய். இன்னும் அதிகம் எதற்கு?" என்று கேட்டான்.
"எனக்கு வலிக்கிறது. நீங்கள் தூங்குங்கள்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, பையில் மாத்திரைகளை தேடி ஆரம்பித்தேன். "கேட்டி. ஒருநாள் படுக்கையிலிருந்து திரும்ப எழுந்திருக்க முடியாத அளவுக்கு அதிகமான மாத்திரைகளை நீ எடுத்து கொள்வாயோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது'' என்று அவன் கூறினான். அவனுடைய வார்த்தைகள் முகத்தில் அறைந்தாற்போல என்னைத் தாக்கின.
எனக்கு 16 வயதாக இருந்தபோது இந்த பழக்கம் தொடங்கியது. என்னை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். எனக்கு குடல்வால் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் நினைத்தனர். வீட்டில் நான் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென வலதுபக்க வயிற்றில் உதைப்பதைப் போல கடுமையான வலி ஏற்பட்டது.
குடல் வாலை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சைக்கு என்னை அழைத்து சென்றார்கள். ஆனால், பெயர் தெரியாத அந்த வலிக்கு குடல் வால் காரணம் அல்ல என்று பின்னர்தான் தெரிய வந்தது. எனது கருப்பையில் கட்டி இருப்பதாகச் சொல்லி, அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை மருத்துவர்கள் அகற்றினர். மிகவும் சோகமான நிலையில் நான் மருத்துவமனையின் படுக்கையில் கிடத்தப்பட்டேன். எனக்காக வருத்தப்பட்டு கொண்டு அங்கே எனது தந்தை இருந்தார். மறுநாள் என்னை மருத்துவமனையில் இருந்து அனுப்பிவிட்டார்கள். அப்போதுதான், co-codamol என்ற மாத்திரையை பரிந்துரையாக எழுதி கொடுத்தனர். அது என் வலியை குறைக்கச் செய்யும் என்று சொன்னார்கள். ஆனால், ஒன்பது ஆண்டுகள் கழித்து, என்னுடைய அன்றாட வாழ்க்கை அந்த வலி நிவாரண மாத்திரைகளைச் சுற்றியே அமைந்திருக்கிறது.
co-codamol மாத்திரையில் உள்ள கோடெய்ன் என்ற போதைப் பொருளுக்கு அடிமையாவதற்கான வாய்ப்பு உள்ளதாக பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவைகள் (NHS) துறை தெரிவித்துள்ளது. ஆனால், டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக் கொண்டால், அதற்கான ஆபத்து குறைவே என்றும் கூறுகிறது. அதில், மூன்று வகையான மாத்திரைகள் வருகின்றன. நான் எடுத்துக் கொள்வதைப் போன்ற, அதிக சக்தி மிகுந்த மாத்திரைகளை, டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே கொடுப்பார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனக்கு வலி குறைந்ததாகத் தெரிந்தது. கருப்பை கட்டியை அகற்றிவிட்டார்கள். வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிட்டால் நிச்சயமாக சில நாட்களில் வலி காணாமல் போய்விடும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், அப்படி வலி குறையவில்லை. அது இன்னும் ஒருபடி மோசமானது.
எனது பெற்றோர்கள் சேர்ந்து வாழவில்லை. எனவே நானும், தந்தையும் மட்டும் வீட்டில் இருந்தோம். சில நாட்கள் நான் சோகத்தில் இருந்த நிலையில், என்னை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். எனக்கு இன்னும் அதிகமான co-codamol மாத்திரைகளை எழுதிக் கொடுத்து, வலியை கவனிக்குமாறு சொல்லி அனுப்பினார்கள் மருத்துவர்கள்.
அதிக சக்தியுள்ள வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாகப் பரிந்துரை செய்வதால் "ஆரோக்கிய மற்றும் சமூகப் பிரச்சனைகளை'' உருவாக்குகிறது என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, கனடா நாடுகளில் இந்த பிரச்சனை உள்ளது என்றும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலும் இதன் பாதிப்பு உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓபியாய்ட் பயன்பாடு வேகமாக அதிகரிப்பதில் உலகளவில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் ஆய்வு முடிவு கூறுகிறது.
2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் 24 மில்லியன் ஓப்பியாய்ட் மாத்திரைகளைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்பது, கடந்த ஆண்டு பிபிசி நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. 2007ல் இருந்து 10 மில்லியன் பரிந்துரைகள் அதிகரித்துள்ளன. தேசிய சுகாதார சேவைகள் துறை ”மருந்துகளுக்கு அடிமைகளை உருவாக்குகிறது'' என்று மருந்து ஆலோசகரும், ஏற்கனவே இந்த மருந்தை பயன்படுத்தியவரும் தெரிவிக்கிறார்.
சண்டே டைம்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வில், அளவு கடந்த பரிந்துரைகள் செய்வதும், இதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஓபியாய்ட் தொடர்பாக தினமும் ஐந்து பேர் மரணம் அடைவதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பத்தாண்டுகளில் இது 41 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு 2000 பேர் உயிரிழக்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என்பதைவிட, சட்டவிரோதமான ஹெராயின் போதை மருந்துகளால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றாலும், வலி நிவாரணத்துக்காக ஓபியாய்ட் மாத்திரைகளை பரிந்துரை செய்வது அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணம் என்று ஓ.இ.சி.டி. அறிக்கை தெரிவிக்கிறது.
கருப்பை உட்சவ்வுப் படலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் எனது வாழ்க்கைப் போராட்டம் தொடங்கியது. கருவில் வளர வேண்டிய திசுக்கள் கருப்பையிலும் வளருவதன் பாதிப்பாக இந்த நோய் கருதப்படுகிறது. இதைக் கண்டறிவதற்காக ஆறு ஆண்டுகள் நான் எண்ணற்ற முறைகள் மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கிறேன். பிரிட்டனில் அதிகமாகக் காணப்படும் குழந்தைப்பேறு பிரச்சனைகளில், இது இரண்டாவது இடம் வகிக்கிறது என்றாலும், இதைக் கண்டறிவது கடினமானது. முதலில் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு co-codamol மாத்திரைகளை நான் எடுத்துக் கொண்டேன். ஆனால், சீக்கிரத்தில் அந்த மாத்திரை மீது நான் பைத்தியமாகிவிட்டதாக உணர்ந்தேன். ஒரு மாத்திரை எடுத்துக் கொண்டதும், அடுத்த மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படும். ஒவ்வொரு முறை பொது மருத்துவரை நான் சந்திக்கும்போதும், கூடுதலாக மாத்திரைகளை எழுதித் தருமாறு கேட்பேன்.
மாத்திரைகள் என்ன உணர்வைத் தந்தன என்று விவரிப்பது கடினம். வலியை அது தடுத்தது. ஆனால், அதற்கும் மேலே மாத்திரை செயல்பட்டிருக்கிறது. அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, மூளை மந்தமாகிவிடும். எனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் எனக்கு ஏற்படும் பதற்றத்தை அது குறைக்கும். திரும்பிப் பார்த்தால், அது ஒரு கொடூரமான, கட்டுப்பாடு இல்லாத சூழலில் நான் இருந்திருக்கிறேன் என்று தெரிகிறது.
முதன்முறையாக நான் மருத்துவமனைக்குச் சென்றதில் இருந்து, எனக்கு வலி இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் பரீட்சார்த்தமாக முயற்சி செய்த நிலையில், எனக்கு நிறைய பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் நடந்தன. ஒவ்வொரு முறை அறுவை சிகிச்சை முடியும்போதும், பெட்டி நிறைய மாத்திரைகளைக் எழுதி கொடுப்பார்கள். கடைசியாக, எனக்கு இன்னும் வலிக்கிறது எனவே அதிகமான மாத்திரைகளைக் கொடுங்கள் என்று மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்பேன்.
நான் அன்றாடம் இயல்பாக செயல்படுவதற்கே எனக்கு வலி நிவாரண மாத்திரைகள் தேவை என்ற நிலைக்கு நான் வந்துவிட்டேன். ஒவ்வொரு நாள் காலையிலும், co-codamol மாத்திரை பாக்கெட்களை எனது பள்ளிக்கூட பையில் வைத்துக் கொள்வேன். அதிகமாக தேவைப்பட்டால், அதற்கு ஏற்பவும் மாத்திரைகளை வைத்துக் கொள்வேன். ஒருநாள் இரவு டீ சாப்பிடும்போது, எதற்காக இவ்வளவு மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறாய் என்று எனது தந்தை கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவர் கவலைப்பட்டார் என்று மட்டும் சொல்ல முடியும்.
என் வாழ்வில் மற்ற விஷயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுவதைப் போல உணர்ந்ததால், அதிக அளவுக்கு மாத்திரைகளை சார்ந்து இருந்தேன் என்பது இப்போது தெரிகிறது. வலி காரணமாக, வகுப்பில் அமர்ந்து கவனிக்க முடியவில்லை. எனவே `ஏ' லெவல் வகுப்புகளை என்னால் முடிக்க முடியவில்லை. துணிக் கடை ஒன்றில் பகுதிநேர வேலை கிடைத்தது. ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவால் போக முடியவில்லை. உண்மையில் எனக்கு என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தந்தைக்கு நோய் வரத் தொடங்கிவிட்டது.
கால்களில் வலிப்பதாகவும், சோர்வாக இருப்பதாகவும் பல வாரங்களாக அவர் கூறி வந்தார். ஆனால் இருவரும் மன அழுத்தத்துக்கு ஆளானோம். அவர் மருத்துவரை பார்க்கப் போனார். அவருக்குப் பரிசோதனைகள் செய்வதற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2011 நவம்பரில் எனக்கு 19 வயதாக இருந்தபோது, எனக்கு வந்த ஒரு தொலைப்பேசி தகவல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
கிடங்கில் இருந்து துணிகளை எடுத்துக் கொண்டு, காய வைப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, என் செல்போனில் அழைப்பு வந்தது. அது என்னுடைய தந்தை. கேட்டி, ஒரு கெட்ட செய்தி. எனக்கு பிராஸ்டேட் புற்றுநோய் இருக்கிறது என்று அவர் சொன்னார். கை நிறைய வைத்திருந்த துணிகளைப் போட்டுவிட்டு, வீட்டுக்கு ஓடினேன். அழுது கொண்டு வீட்டில் நுழைந்தபோது, என் தந்தை வந்திருக்கவில்லை. தனியாக அங்கே நின்றிருந்தேன். நான் ஒரே விஷயம் மட்டும்தான் செய்ய முடியும் என்று தோன்றியது. இரண்டு co-codamol மாத்திரைகளை நான் எடுத்துக் கொண்டேன்.
தந்தை மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டேன். உணவு வாங்கி வருவது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது - எல்லாமே என் வலியைத் தாங்கிக் கொண்டு செய்தேன். மாத்திரைகள் மட்டுமே எனக்கு கட்டுப்பாட்டைத் தந்தன. அதை எடுத்துக் கொண்டால் சில நிமிடங்களுக்கு மரத்துப் போகும், வலி நீங்கும்.
ஆரம்ப கட்டத்திலே தந்தைக்கு புற்றுநோயை டாக்டர்கள் கண்டுபிடித்துவிட்ட போதிலும், நிலைமை மேலும் மோசமானது. நோய் கண்டறியப்பட்டு 11 மாதங்கள் கழித்து, திடீரென மருத்துவமனையில் என் தந்தை மரணமடைந்துவிட்டார்.
அவருடைய மரணத்துக்குப் பிந்தைய நாட்கள் சோகமாகிவிட்டன. குடும்பம் தலைகீழாக மாறிவிட்டது. சிலர் உணவு வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால், பெரும்பாலான நாட்கள் முற்றிலும் மரத்துப் போய் படுக்கையிலேயே கிடந்தேன். என்னுடைய co-codamol மாத்திரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. மெதுவாக அது ஆரம்பமானது. இரண்டு மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொண்டேன். பிறகு, மேலும் இரண்டு எடுத்துக் கொண்டேன்.
அது அதிகமான அளவு, நான் செய்வது தவறு என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், நான் கவலைப்படவில்லை. மரத்துப் போய் கிடப்பதை நான் விரும்பினேன். co-codamol மேகமூட்டம் என்று நான் அதை சொல்லிக் கொண்டேன். மந்தமான உணர்வு எனக்குத் தோன்றும். மார்பு வலி சிறிது நேரத்துக்கு பறந்து போயிருக்கும். ஆனால், அது ஒருபோதும் அதிக நேரம் நீடித்தது இல்லை. மாத்திரை எடுத்துக் கொண்டதும், தந்தையை இழந்துவிட்ட வலி மீண்டும் வந்துவிடும்.
இந்த மருந்தின் பக்க விளைவுகளாக மலச்சிக்கல், உடல் சோர்வு மற்றும் தூக்கமான நிலை போன்றவை கொடூரமானவை. பலவீனம் காரணமாக அடிக்கடி வேலையில் இருந்து ஓய்வெடுத்தேன். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தது. எல்லா நேரமும் தனித்துவிடப்பட்டேன்.
எனக்கு 21 வயதாக இருந்தபோது, ஒரு நாள் இரவு, உள்ளூர் பார் ஒன்றுக்கு இரவு நேர மாணவிகள் விருந்துக்கு என் தோழி அழைத்திருந்தாள். இரவில் வெளியில் செல்வதற்குத் தேவைப்படும் பொருட்களை அவள் சரி பார்த்தாள். அடையாள அட்டை, பணம், செல்போன் என சரி பார்த்தாள். ஆனால் நான் சரிபார்க்க வேண்டிய பட்டியல் வேறு மாதிரியாக இருந்தது. Co-codamol எடுத்துக் கொண்டாயா, கூடுதலாக எடுத்துக் கொண்டாயா என்பதாக இருந்தது.
என் தோழிகள் கவனிக்காதபடி, அதை ரகசியமாக வைத்துக் கொண்டிருந்தேன் கிளப் கழிப்பறைக்குச் செல்லும் போது, மாத்திரை போட்டுக் கொள்வேன் அல்லது அவர்கள் கவனிக்காதபோது போட்டுக் கொள்வேன். மாத்திரை போட்டுக் கொள்ளும் போது மது அருந்துவது இன்னும் நன்றாகத் தோன்றியது. மிதப்பது போல தோன்றியது. இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது எப்போதாவது பலவீனமாகிவிடுவேன். கிளப்பைவிட்டு வெளியேறிவிடுவேன். நான் அதிகம் குடித்துவிட்டதாக பலரும் நினைப்பார்கள். ஆனால், எனக்கு மட்டும்தான் உண்மை தெரியும். கடைசியாக 2014ல் எனக்கு பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அப்போது எனக்கு வயது 22. இன்னொரு அறுவை சிகிச்சை செய்தார்கள் எனது வலதுபுற கருப்பை இடுப்பெலும்பின் மீது சரிந்துவிட்டதாக டாக்டர்கள் கண்டறிந்தனர். அந்த அறுவை சிகிச்சையில், உண்மையாக என் வலி குறைந்தது. பழைய நிலைமை திரும்பிவிட்டதைப் போல உணர்ந்தேன். எனது மாத்திரைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் தொடங்கிவிட்டேன். பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் எடுத்துக் கொண்டேன். ஆனால், அது அதிக நாள் நீடிக்கவில்லை. மாத்திரைகள் சக்தி அதிகமானவை என்பதால் என்னால் விட்டுவிட முடியவில்லை.
என் தந்தையின் இழப்பில் இருந்து மீள முடியாமல், மன அழுத்தத்திற்கு ஆளானேன். என்னுடைய தன்னம்பிக்கையை அது வெகுவாகப் பாதித்தது. வலியில் இருந்தும், உடல், மன வலி மற்ற எல்லாவற்றில் இருந்தும் விடுபடுவதற்கு வலி மாத்திரைகள் மட்டும்தான் தீர்வு என்றாகிவிட்டது. இப்போது மாத்திரைகளின் எண்ணிக்கையை அதிகரித்தேன். சில வாரங்களில், பரிந்துரை அளவைவிட இரண்டரை மடங்கு அதிகமாக எடுத்து கொள்ளத் தொடங்கினேன். எப்போதும் எனக்கு மாத்திரைகள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. எனது காதல் முறிந்த பிறகு, மாத்திரைகளையே அதிகம் சார்ந்திருந்தேன்.
2017ல் புதிய காதலனை நான் சந்தித்தபோது நிலைமை கொஞ்சம் சீரானது. அப்போது எனக்கு வயது 24. ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டோம். பிறகு சீக்கிரம் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம். நான் மகிழ்ச்சி அடைந்தேன். கடைசியில், என் வாழ்வில் ஏதோ சரியாக வருவதாகத் தெரிந்தது.
எனக்கு மாத்திரைகளின் தேவை இருப்பதாகவும், இயல்பான அளவுக்கு மட்டுமே மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாகவும் அவனிடம் கூறியிருந்தேன். ஆனால், நாங்கள் சேர்ந்து வாழத் தொடங்கிய பிறகு, அவனிடம் இருந்து மாத்திரைகளை ஒளித்துவைக்கத் தொடங்கினேன். எப்படி உணர்கிறேன் என்பது பற்றி டாக்டரிடம் நான் ஒருபோதும் பேசவில்லை. மிக மோசமாக 2017ல், பரிந்துரை அளவைவிட மூன்று மடங்கு அதிகமாக மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்.
திரும்பிப் பார்த்தால் நான் சிக்கலில் இருந்தேன். அன்று நடு இரவில் நான் மாத்திரைகளைத் தேடிக் கொண்டிருப்பதை அவன் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட பிறகு, என்னை மருந்துக்கு அடிமையானவளாக அவன் பார்க்கிறான் என்று உணர்ந்தேன். என் காதலன்கூட கவனிக்க முடியாத அளவுக்கு, மாத்திரைகளை சார்ந்திருக்கும் நிலையை நான் மறைத்து வந்திருந்தேன்.
மறுநாள், உதவி பெறுவதற்கு முடிவு செய்தேன். எனது டாக்டருடன் தொடர்பு கொண்டேன். அவர் தேசிய மருந்து கல்வி மற்றும் தகவல் சேவை அமைப்பான பிராங்க் (FRANK) அமைப்புக்கு பரிந்துரை செய்தார். கலந்தாய்வு மற்றும் வழிகாட்டுதல் மூலம், அடிமைப்பழக்கத்தை விட்டொழிக்க உதவும் ஒரு மையத்துக்கு அங்கிருந்து என்னை அனுப்பி வைத்தார்கள்.
உதவியாளர் ஒருவரின் உதவி எனக்குத் தேவைப்பட்டது. அவர் முழுமையான முடிவு ஏதும் செய்து கொள்ளாமல் எனக்கு கலந்தாய்வு தந்தார். என் தந்தையின் மரணம், எனது கடந்தகால தொடர்பு, மருந்துக்கு அடிமையான நிகழ்வுகளுக்கு நான் எப்படி நடந்து கொண்டேன் என்பவை பற்றியெல்லாம் அவர் பேசினார். அவருடைய உதவியுடன் 2018 நவம்பருக்குள் இந்தப் பழக்கத்தை விட்டொழித்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டேன். 2019 ஜனவரி 1 இல் மருந்துக்கு அடிமையற்ற நிலைக்கு திரும்ப முடிவெடுத்தேன்.
முதலில் பயங்கரமாக இருந்தது. வேலை செய்யும்போது, என் கையில் இருக்கும் சிறிய வெள்ளை மாத்திரியை வெறித்துப் பார்ப்பேன். அதை வெறுப்பேன், என்னையே வெறுப்பேன், அதை எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டேன். இல்லாவிட்டால், அதில் வீழ்ந்துவிடுவேன் என தெரியும்.
இயல்புநிலைக்குத் திரும்புவது வலி மிகுந்ததாக இருந்தது. தொடர்ந்து பலவீனமாக, சோர்வாக, எரிச்சலாக உணர்ந்தேன். சின்ன விஷயங்களுக்குக் கூட கோபம் கொண்டேன். சில நாட்களில் படுக்கையில் இருந்துகூட எழுந்திருக்க முடியாது. எப்போது வலி ஏற்பட்டாலும், மாத்திரை இல்லாமல் சமாளிப்பதற்கு ரொம்பவும் சிரமப்பட்டேன்.
கடைசியில் நான் சாதித்துவிட்டேன். ஆண்டின் இறுதியில், சுத்தமாகிவிட்டேன். என் காதலனை நினைத்துக் கொண்டேன். மாத்திரைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வந்து, மாத்திரைகளை முழுமையாக நிறுத்திவிட்டேன்.
வலி நிவாரண மாத்திரைகளை பரிந்துரைக்கும் விஷயத்தை டாக்டர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று நான் கேட்டபோது, ”டாக்டர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருப்பவர்களின் உடல், மன பாதிப்பு மற்றும் சமூக பாதிப்புகளை பரிசீலித்து விட்டுதான் அவர்கள் பரிந்துரை செய்வார்கள்'' என்று பொது மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரி தெரிவித்தது. நீண்டகால வலி தொந்தரவுக்கு `எளிதான தீர்வு கிடையாது' என்று அவர்கள் கூறினர். சில நேரங்களில், நோயாளிகளுக்கு ஓபியாய்ட் கலந்த மருந்துகள் தான் நிவாரணம் தரும், அதற்கு அடிமையாகிவிடும் ஆபத்து இருந்தாலும் அதுதான் நிவாரணம் தரும் என்றனர். நோயாளிகள் அதிக காலத்துக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொது மருத்துவர்கள் விரும்ப மாட்டார்கள். குறைந்தபட்ச சக்தி உள்ள மாத்திரைகளை, குறைந்த காலத்துக்கு மட்டுமே அவர்கள் பரிந்துரைப்பார்கள். அவ்வப்போது, நோயாளிகள் தங்களை வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்கள். சாத்தியமான நேரங்களில் மாற்று சிகிச்சைகளைக் கையாள்வார்கள் என்றும் தெரிவித்தனர்.
டாக்டர்களை நான் குறை சொல்ல மாட்டேன். அதிக அழுத்தம் காரணமாக, தங்களால் இயன்றதை அவர்கள் செய்கிறார்கள். போதிய நேரமும், வசதிகளும் இல்லாத நிலையில் இவ்வாறு செய்கின்றனர். ``ஏதாவது ஒரு விஷயத்துக்கு மக்கள் அடிமையாகிவிட்டால், அதை வாங்குவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்'' என்று கல்லூரியில் தெரிவித்தனர். நான் அப்படித்தான் செய்தேன். ஆனால், இதுபோன்ற மாத்திரைகளுக்கு அடிமையாகிவிட்டால், எவ்வளவு பெரிய ஆபத்துகள் ஏற்படும் என்பது பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வலி நிவாரண மாத்திரைகளுக்கு அடிமையாக வேண்டும் என்று நானாக தேர்வு செய்யவில்லை. கட்டுப்பாட்டை இழந்து மெல்ல மெல்ல அப்படி ஆகிப் போனேன்.
இப்போது ஏறத்தாழ 200 நாட்கள் நான் மாத்திரை எடுக்காமல் சுத்தமாக இருக்கிறேன். நான் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்று ஒவ்வொரு நாளும் எனக்கு சொல்லிக் கொள்வதை ஞாபகமாகச் செய்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக நான் ஆரோக்கியமாக, துடிப்பாக உணர்கிறேன். வரும் கோடைப் பருவத்தில் நானும் காதலனும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். எனக்குள் இருந்த co-codamol பெண் அடங்கிவிட்டாள். அவள் காணாமல் போய்விட்டாள் என்பதில் என்னால் மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது.
சில நேரங்களில், என் படுக்கைக்கு அடியிலோ அல்லது சோபாவுக்கு அடியிலோ பழைய காலி மாத்திரை டப்பாக்களை பார்க்கிறேன். அவற்றை ஒரு நொடி பார்க்கிறேன். என்னை எந்த அளவுக்கு அவை கட்டுப்படுத்தி வைத்திருந்தன என்று நினைத்துக் கொள்வேன். பின்னர் அந்த பாக்கெட்டுகளை கசக்கி, தூர எறிந்துவிடுவேன். (எலியனோர் லேய்ஹெ-விடம் கூறியவாறு எழுதப்பட்டது)
(நன்றி: பிபிசி தமிழ்)
Add new comment