Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சரணடைதல் பற்றி இலங்கை ராணுவம் மறைப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ. நிரோஷ் குமார் கோரியிருந்து நிலையிலேயே, இலங்கை இராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் தகவலை, அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான தமிழர்கள், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்திருந்ததாக, அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சரணடைந்த பலர் இன்று காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி வட மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமது உறவினர்களை இலங்கை இராணுவம் அழைத்து சென்றதாக பலர் இன்றும் தெரிவித்து வருகினறர். இந்த விடயம் தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சரும், தனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக கூறும் பெண்மணியுமான அனந்தி சசிதரனிடம் பி.பி.சி தமிழ் வினவியது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது கணவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை தானும், தன்னுடன் இருந்த இலட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அவர் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இலங்கை இராணுவத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் இருக்கவில்லை என கூறிய அவர், இராணுவம் தம்மிடம் சரணடைந்தோர் தொடர்பான தகவல்களை முழுமையாக மறைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோரை ஒப்படைக்குமாறு கோரி பல வருடங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன், போராட்டம் நடத்துபவர்கள் இராணுவத்திற்கு எதிராக போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.
(நன்றி : பிபிசி நியூஸ்)
Add new comment