Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஒப்புரவு அருள்சாதனத்தின் உடைபடா முத்திரை காக்கப்படவேண்டும்: திருத்தந்தை
ஒப்புரவு திருவருள்சாதனத்தில் கேட்கும் விசயங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று, அரசியல் அல்லது எவ்வித சட்டமுறைப்படி அருள்பணியாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவது, சமய சுதந்திரத்தை மீறுவதாகும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, கலிஃபோர்னியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில், ஒப்புரவு அருள்சாதனத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்படுவதையொட்டி, “ஒப்புரவு திருவருள்சாதனத்தில் கூறப்பட்டவைகள் குறித்து, இரகசியம் காப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் அருள்சாதன உடைபடா முத்திரை” என்ற தலைப்பில், திருப்பீட பாவமன்னிப்பு சலுகை அமைப்பு, ஜூலை 01, இத்திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒப்புரவு அருள்சாதனத்தின் முத்திரை, உடைக்கப்பட முடியாதது என்பதை மீண்டும் உறுதிசெய்துள்ள திருப்பீட பாவமன்னிப்பு சலுகை அமைப்பு, திருஅவையின் வாழ்வில் இரகசியம் காக்கப்படவேண்டிய ஏனைய கூறுகளின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, ஒப்புரவு அருள்சாதனத்தின் முத்திரை, ஒருபோதும் உடைக்கப்பட முடியாதது என்பது, அருள்பணியாளர்கள், ஒப்புரவு அருள்சாதனத்தில் கேட்டவைகளை, வெளிப்படுத்த வேண்டுமென்று, ஒருபோதும் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று அர்த்தமாகும் என உரைத்துள்ளது.
தனது தவறுக்காக வருந்தி, ஒப்புரவு அருள்சாதனம் பெற வருபவருக்கு, உண்மையாக இருப்பது, கிறிஸ்து மற்றும் திருஅவையின், தனித்துவமிக்க மற்றும், உலகளாவிய மீட்பிற்குச் சாட்சியாக இருப்பது ஆகியவற்றின் அடையாளங்களாக, அருள்பணியாளர்கள் விளங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவ்வறிக்கை, இதில், இரத்தத்தைச் சிந்தும் நிலை வந்தாலும்கூட, ஒப்புரவு அருள்சாதனத்தின் முத்திரையை, அருள்பணியாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஒப்புரவு அருள்சாதனம், திருஅவையின் உள்ளே நிகழ்வதாகும், இது திருஅவைக்கு வெளியே இடம்பெற இயலாதது என்றும், அவ்வாறு இடம்பெறுவது, அருள்பணியாளரை நம்பி, தனது சொந்த நிலையை அல்லது சூழலை வெளிப்படுத்தி, அதற்காக மன்னிப்பு கேட்கும் மனிதரின் மாண்புக்கு எதிரான பாவம் என்று, திருத்தந்தை கூறியிருப்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Add new comment