Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உணவையும் நீரையும் வீணாக்காதீர்கள்: திருத்தந்தை
பட்டினியை ஒழிப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாக, உலகெங்கும் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், உலகிலிருந்து பட்டினியை முற்றிலும் ஒழிக்கும் இலக்கு இன்னும் நம்மிடையே பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.
உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO, தன் 41வது அமர்வை உரோம் நகரில் நடத்துவதையொட்டி, இந்த அமர்வில் கலந்துகொண்ட 500க்கும் அதிகமான பன்னாட்டு பிரதிநிதிகளை, ஜூன் 27, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பட்டினியை ஒழிப்பதற்கு FAO நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
FAO நிறுவனத்தின் தலைமை இயக்குனராக 2012ம் ஆண்டிலிருந்து பணியாற்றிய பேராசிரியர் ஜோஸ் க்ராஜியானோ டே சில்வா அவர்கள், விரைவில் தன் பணியை நிறைவு செய்வதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, அவர் ஆற்றிய பணிக்கு தன் உரையின் துவக்கத்தில் நன்றி கூறினார்.
தற்போது நடைபெற்றுவரும் 41வது அமர்வில், ஜூன் 23ம் தேதி, தலைமை இயக்குனர் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கியூ டோங்கியு அவர்களை வாழ்த்தி வரவேற்றார், திருத்தந்தை.
தேவையில் இருப்போரின் குரலைக் கேட்பது, அனைவரின் கடமை.
உணவு, மற்றும் நீர் பற்றாக்குறை, வறுமைப்பட்ட, மற்றும் மிகவும் நலிந்த நாடுகளின் உள்நாட்டு விடயம் என்று உலக நாடுகள் ஒதுங்கிக்கொள்ள இயலாது என்பதை, தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் குரல் எழுப்பும் சகோதரர், சகோதரிகளின் குரலைக் கேட்பது, அனைவரின் கடமை என்பதை தன் உரையில் வலியுறுத்தினார்.
உணவையும், நீரையும் வீணாக்கும் பழக்கம்
உலகெங்கும் நிலவும் உணவு, மற்றும் தண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்கு, செல்வம் மிகுந்த நாடுகளில் வாழ்வோர் உணவையும், நீரையும் வீணாக்கும் பழக்கத்தை பெருமளவு குறைப்பது, அவரவர் பொறுப்பில் உள்ள ஒரு சவால் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உலக வளங்களை வீணாக்காமல் அடுத்தத் தலைமுறைக்கு வழங்கும்போது, அவர்களும், வீணாக்கும் கலாச்சாரத்தை விட்டு விலகி, பொறுப்புடன் வாழும் பக்குவம் பெறுவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்றத்தின் நிலையற்ற தன்மை, உணவு பாதுகாப்பு மற்றும் குடிபெயரும் செயல்பாடுகள் ஆகியவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்தச் சங்கிலித் தொடரின் விளைவாக உலகெங்கும் நிகழ்ந்துவரும் புலம் பெயர்ந்தோர் பிரச்னையை FAO பிரதிநிதிகளுக்கு நினைவுறுத்தினார்.
FAO முயற்சிகளுக்கு திருப்பீடத்தின் முழு ஒத்துழைப்பு
உணவு, மற்றும் வேளாண்மை ஆகிய இரு அம்சங்களும் மனிதருக்கு பாதுகாப்பு வழங்குகின்றன என்பதால், இவை இரண்டையும் இணைத்து பணியாற்றும் FAO மற்றும் ஏனைய பன்னாட்டு அமைப்புக்கள், தீர்மானத்துடன் செயலாற்றும் நேரம் இது என்பதை, தன் உரையில் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை.
உலகிலிருந்து பட்டினியை முற்றிலும் ஒழிக்கவும், இந்தப் பூமிக்கோளத்தை அனைவரும் வாழக்கூடிய பாதுகாப்பான இல்லமாக மாற்றவும், FAO நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து நேர்மறையான முயற்சிகளுக்கும் திருப்பீடம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்ற உறுதியை வழங்கி, இறையாசீர் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.
(நன்றி: வத்திக்கான் நியூஸ்)
Add new comment