Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சாக்குபைக்குள் கிடந்த எலும்புக்கூடுகள் : மர்மம் என்ன
பிகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பல எலும்புக்கூடுகள் சனிக்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து அறிக்கை அளிக்குமாறு அந்த மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறையும் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
அந்த மருத்துவமனையில், சமீபத்திய மூளைக் காய்ச்சலால் இதுவரை உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 128 ஆக உள்ளது. சனிக்கிழமை அங்கு காவல் அதிகாரிகள் சோதனை செய்யச் சென்றபோது, அவர்களுடன் மருத்துவமனை நிர்வாகிகளும் சென்றனர் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்கள் கருகிய நிலையில் இருந்தன என்றும் மருத்துவமனையின் பின்னால் இருந்த காட்டுப் பகுதியில் கிடைத்த சாக்குப் பைகளில் பல எலும்புக்கூடுகள் இருந்தன என்றும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. விசாரணை நடந்தச் சென்ற காவல் அதிகாரி சோனா பிரசாத் சிங், "பெற்றுக்கொள்ள ஆள் இல்லாதவர்களின் உடல்கள் இங்கு எரிக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டால், விதிகளின்படி அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்த அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். அதன்பின் 72 மணிநேரம் பிணவறையில் வைத்திருக்க வேண்டும்.
"72 மணி நேரத்துக்குள் யாரும் உடலைக் கைப்பற்ற வரவில்லை என்றால் அவற்றை, விதிகளைப் பின்பற்றி எரிக்கவோ புதைக்கவோ செய்வது மருத்துவமனையின் பிணக்கூராய்வுத் துறையின் பொறுப்பு," என ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.கே.ஷாஹி தெரிவித்துள்ளார்.
(நன்றி: பிபிசி தமிழ்)
Add new comment