Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழா
உலகளாவிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை, வட இத்தாலியில், பல்லாயிரக்கணக்கான, இளையோர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்க தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பித்து வருகின்றனர். ஜூன் 17, இத்திங்களன்று, 140 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கு அதிகமான இளையோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, ஜூன் 23, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.
ஒரு வாரமாக நடைபெற்றுவரும், 4வது உலகளாவிய Solferino இளையோர் கூட்டத்தில், காலநிலை மாற்றம் முன்வைக்கும் சவால்கள் உட்பட, இன்றைய உலகை அதிகம் பாதிக்கின்ற பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிகழ்வின் உச்சகட்டமாக, ஜூன் 22, இச்சனிக்கிழமையன்று, Solferino மற்றும் Castiglione delle Stiviere நகரங்களுக்கு இடையே நடைபெற்ற தீச்சுடர் பேரணியில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
சொலபிரினோ நகரில்தான், 1859 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஹென்றி டுனாண்ட் என்பவர், பிரெஞ்ச் மற்றும், சர்தீனியப் படைகளுக்கு இடையே நடந்த கடும் போரில் இரத்தம் சிந்துதலைக் கண்டார். அதன் விளைவாக அவர் மனதில் உருவானதுதான், செஞ்சிலுவை சங்கம்.
உலகலாவிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம், 1919 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, இது, 190, தேசிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களைக் கொண்டுள்ளது. (நன்றி: வத்திக்கான் நியூஸ்)
Add new comment