இளைஞர்கள் நீங்கள் வரலாறுகள்!

சில மாதங்களுக்கு முன்னர் டெட் டாக் நிகழ்ச்சியில் ஒரு இளம் (கலெக்டர்) மாவட்ட ஆட்சியரின் வாழ்க்கை உரையை பார்த்தேன், மெய்சிலிhத்துப்போனேன், உந்துசக்தியைப்பெற்றேன். அவர்தான் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட நபர்களைக்கொண்டக் கூட்டுக்குடும்பத்தில் பிறந்தவர் சுரபி கௌதம். சிறுவயதில் கணதத்திலும் அறிவியலிலும் சிறப்பாக படித்தவர். மின்சார வசதி இல்லாமல், மண்ணெனெய் விளக்கு மட்டும் இருந்தபோதும் தனது நேரங்களை நல்லமுறையில் புதியன கற்பதில் செலவழித்தவர். பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மதிப்பெண் பெற்று அரசு உதவித் தொகையுடன் பயின்றவர். தனது இலக்கு கலெக்டர் ஆகி தம் கிராம மக்களுக்கு நல்லது செய்வது என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தவர். 

இன்ஜினியரிங் படிப்பதற்கு போபால் நகருக்குச் சென்றார். அதுவரை இந்தி மீடியத்தில் படித்தவர், கல்லூரியில் ஆங்கிலம் பேசமுடியாமல் திணரினார். அவமானங்கள் ஏற்றுக்கொண்டார். தன் தாயிடம் வீட்டிற்கு திரும்புவதாகச் சொன்னர். அப்பொழுது அவருடைய தாய் நம்முடைய கிராமத்திலிருந்து வெளியே படிக்க அனுப்பட்ட முதல் பெண் நீதான். நீ திரும்பி வந்தால்; உயர்ந்த படிப்பு படிக்க முயலும் அனைத்து குழந்தைகளையும் பாதிக்கும். உன்னை நம்பித்தான்; வளரும் பெண் பிள்ளைகளின் வாழ்வு இருக்கின்றது என்று கூறினார். தன்னுடைய சமூக கடமையை உணர்ந்து வெறிகொண்டு படித்தார். பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக வந்தார். சாதனைகள் பல படைத்தார். UPSC தேர்வில் இவர் எடுத்திருப்பதே இன்றுவரை அதிகமதிப்பெண். அவ்வளவாக படித்தார். இரயில்வே துறையில் வேலைக்குச் சேர்ந்து பணிசெய்தார்.  

பெயர், வசதி, புகழ் இருந்தாலும் அவளால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. இவ் வேளையில் அவளுடைய தாய் சொன்னார் சுரபி உன்னுடைய 10 வகுப்பு முடித்தபோது அளித்த பத்திரிக்கைப் பேட்டியை நினைவில் கொள், நீ கலெக்டராக நம் மக்களுக்கு வேலைசெய்வதாக உறுதிகொண்டாய். நீ அதை அப்படியே விட்டுவிட்டாய் என்றார். தனது 22 ஆம் வயதில் ஐஏஎஸ் படிப்பிற்காக தன்னையே தயாரித்தார். படிப்பது மிகவும் கஸ்டமாக இருந்தது. தாயிக்கு போன் செய்தார் என்னுடைய நண்பர்கள், என்னோடு படித்தவர்கள் அனைவரும் படிப்பினை முடித்து வேலைபார்த்து வாழ்க்கை நல்லா ஜாலியாக இருக்கின்றார்கள், நான் மட்டும் ஏன் இவ்வளவு கஸ்டப்பட்டு உழைக்கவேண்டும், இவ்வளவு துன்பம் அனுபவிக்கவேண்டும், ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு போராட்டம் என்று புலம்பி அழுதார். அவர் தாய் சொன்னார் சுரபி நான் என் நோயின் காரணமாக வெளியில்கூட செல்லமுடியாத நிலையிலும், எவ்வளவு கஸ்டங்கள் மத்தியிலும் உன்னை வளர்த்தேன், நீ நல்லா இருக்கவேண்டும் என்பதற்காகதான், உன்னால் முடியும் என்றார். அன்றிலிருந்து தனது படிப்பைப் பற்றியே, இலக்கை அடைவதைப்பற்றியோ அவர் புலம்பியதில்லை. தனது 25 ஆம் வயதில் (2016) கலெக்டராக அனைவரும் மகிழும் வண்ணம் தனது கிராமத்திற்கு வந்தார். நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதாக அவர் சொன்னார் கடின உழைப்பிற்கு ஈடுஇணையானது கிடையாது, வெற்றிக்கு குறுக்குவழியும் கிடையாது.

உலகமே நம் கைகளில் அதுவும் மொபைல் போனில் அடங்கிவிட்டது என்னும் ஒரு தவறான கருத்தியலை ஆழமாக அனைவரின் மனதிலும் திட்டமிட்டு உட்புகுத்திக் கொண்டிருக்கிருக்கும் சினிமாக்கள், ஊடகங்கள் மத்தியில் இப்படியும் இளைஞர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அனைவரும் இப்படியல்ல. ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் அதிகமாக இல்லாமல் இருந்தது - இருந்தபோதிலும் அவர்கள் முனைப்போடு தேடலில் ஈடுபட்டார்கள். வாழ்க்கையை வாழ்ந்தார்கள், வாழ்விற்கான வழிமுறைகளை இவ்வுலகிற்கு விட்டுச்சென்றார்கள்.

இன்று தேவைக்கும் அதிகமான வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருந்தாலும் வாழ்விற்கான தேடலும், புதிய படைப்பதற்கான ஆர்வமும் குறைந்துகொண்டேபோகின்றது. சமூக வலைதளங்கள் நம்முடைய நேரத்தை தின்றுகொண்டிருக்கின்றது. நம்முடைய கைகளில் அலைபேசி இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கை முடிந்ததுபோல உணர்கின்றோம். மற்றவர்களோடு அதுவும் இலக்கு மேம்பட்டவர்களோடு நம்மை இணைத்துக்கொள்ளாமல், போதிய படிப்பு போதிய வசதியான வாழ்க்கை என்று படித்து வேலை செய்து கொண்டிருக்கும் சாதாரணவர்களோடு நம்மை ஒப்பிட்டு, நம்முடைய அசாதாரண சக்தியை புதைத்து, சாதாரணவராக வாழ்பவர்கள்தான் இன்று ஏராளம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுரபி நமக்கு ஒரு சாவல், தேடல். நண்பர்கள் ஜாலியாக இருக்க நான் மட்டும் இந்த படிப்பை எடுத்து கஸ்டப்படுகின்றேனே என்று எண்ணும் நல்ல இளைஞர்களுக்கு சுரபி ஒர் ஆத்மார்த்த நம்பிக்கை. நீங்கள் படும் கஸ்டமும் வேதனையும் உங்களை உயர்த்தும், மொபைலில் நேரத்தை செலவழிப்பதைவிட, உங்களுக்காக செலவழியுங்கள். ஏனெனில் மொபைல் காட்டும் உலகம் ஒரு பிரம்மை. 

இவ்வுலகில் தங்களுடைய இளமையை சரியாக பயன்படுத்தியவர்கள் வெற்றிபெற்றார்கள், உலகை வளப்படுத்தினார்கள். நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்.

கடின உழைப்பிற்கு ஈடுஇணையானதும் கிடையாது, வெற்றிக்கு குறுக்குவழியும் கிடையாது.

-    இம்மானுவேல்

 

Add new comment

13 + 2 =