பேராசையினால், நம்மைச் சுற்றியுள்ள படைப்பு சீரழிகிறது


plastic and air pollution danger to earth

படைப்பின் மீது மதிப்பும், அக்கறையும் காட்டும்வண்ணம் ஆசியாவில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வு முறையை மீள் ஆய்வு செய்யவேண்டும் என்று, ஆசிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், Benedict Alo D’Rozario அவர்கள் கூறியுள்ளார்.

அண்மையில் (மார்ச் 22) ஆசிய காரித்தாஸ் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பொது நிலையினர் என்ற தனித்துவம் பெற்ற D’Rozario அவர்கள், திருத்தந்தை எழுதிய 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் அடிப்படையிலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் முன்னேற்றம் குறித்து கூறிய கருத்துக்களின் அடிப்படையிலும், பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு சில மனிதரின் கட்டுக்கடங்காத பேராசையினால், நம்மைச் சுற்றியுள்ள படைப்பு அனைத்தும் சீரழிகிறது என்றும், இந்த சீரழிவின் தாக்கங்கள் வறியோரையும், குறிப்பாக, குழந்தைகளையும் பாதிக்கின்றன என்றும் D’Rozario அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சுற்றுச்சூழல் பாதிப்புக்களால், தென் ஆசியாவில் பிறக்கும் குழந்தைகளின் நிலை மிகக் கவலையளிப்பதாகக் கூறிய D’Rozario அவர்கள், குழந்தைகள் இறப்புக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது, காற்று மாசுக்கேடு என்பதை வலியுறுத்திக் கூறினார்.

சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் காற்று மாசுக்கேடு பெரும் உயிர்கொல்லியாக மாறியுள்ளது என்பதையும் தன் பேட்டியில் குறிப்பிட்ட D’Rozario அவர்கள், நம் வாழ்வு முறையில் அடிப்படையான மாற்றங்கள் விரைவில் உருவாகவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

பங்களாதேஷ் நாட்டில் பிறந்த Benedict Alo D’Rozario அவர்கள், கடந்த 29 ஆண்டுகளாக பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பில் பணியாற்றியவர் என்பதும், இவர், தனக்கு முன் ஆசிய காரித்தாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய டோக்கியோ பேராயர் Tarcisio Isao Kikuchi அவர்களுக்குப் பின், இப்பொறுப்பை ஏற்கும் முதல் பொது நிலையினர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (Fides) 

Add new comment

12 + 7 =