வணக்கத்திற்குரிய பவுலின் மரிய ஜரிகோ

யார் இவர்: வணக்கத்திற்குரிய பவுலின் மரிய ஜரிகோ 1799 ஜுலை 22 இல் பிரான்ஸ் நாட்டில் லியோன் நகரில் திரு. ஆன்டனி ஜரிகோ திருமதி. ஜான் ஜரிகோ இவர்களுக்கு மகளாகப் பிறந்தார். சிவில் நிலைப்புதன்மையற்ற சூழலில் வளர்ந்தார். அதாவது பிரஞ்சு புரட்சிக்குப் பின்னர் பிறந்தார். கடவுளுக்கு பிரமாணிக்கமாய் இருப்பதற்கான இதயத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று தனது வாழ்க்கை குறிப்பில் குறிப்பிடுகிறார். 

அவருக்கு அவருடைய அண்ணன் பீலியசை மிகவும் பிடிக்கும். அவர் சீனாவிற்கு நற்செய்தி அறிவிப்புப் பணியாளராக செல்ல விரும்பினார். அவர் சகோதரரிடம் தானும் ஏழைகளையும் நோயாளிகளையும் அரவணைக்கவும், ஆலயப்பீடங்களை மலர்களால் அலங்கரிக்கவும் அவரோடு வருவதாகவும் வேண்டினார். 

அவருடைய இளம் வயதில் அவருடைய செயல்பாட்டில் நிலைப்புதன்மையற்றவராக இருந்தார். சில வேளைகளில் நற்கருணைப் பிரசன்னத்திலும், அன்னை மரியாவின் முன்னாலும் மணிகணக்கில் அமர்ந்தார். சில வேளைகளில் சமூக நிகழ்வுகளில் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் உடையனிந்து வலம்வருவதில் தன்னுடைய நேரங்கள் முழுவதையும் செலவழித்தார்.

அவளுடைய 15 ஆம் வயதில் வீட்டை சுத்தம் செய்கின்றபோது மேலிருந்து கீழே விழுந்தார். அவருடைய நரம்பு மண்டலங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியது. அவர் மீண்டும் பழைய நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் யாரும் கொடுக்கவில்லை. இதனால் அவருடைய தாய் நோய்வாய்பட்டார். இவரையும் நலமாக்கும்பொருட்டு இவருடைய தந்தை இவரை தாயிடமிருந்து பிரித்து, லியோன் நகரை விட்டு வெளியே ஒரு கிராமத்து வீட்டில் தங்கவைத்தார். இதற்கிடையில் அவருடைய தாய் இறந்தார். இச் செய்தியை அவளிடம் யாரும் தெரிவிக்கவில்லை. 

அந்த கிராமத்து பங்கின் பங்குத்தந்தை பவுலினை அழைத்து அவரை பாவமன்னிப்புப் பெற்று நற்கருணையைப் பெறுமாறு பணித்தார். அது அவளுக்கு மிகவும் உந்து சக்தியாக இருந்தது. அது முதல் அவளுடைய செயலிந்த பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலையை அடையத் தொடங்கியது. 

கடைசியாக அவருடைய தாயின் இறப்பானது அவருக்கு அறிவிக்கப்பட்டது. அவள் அதைப் பக்குவமான முறையில் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவள் நோட்ரடாம் பசிலிக்காவிற்கு கொண்டுவரப்பட்டார். அங்கே மடோனா அன்னையிடம் குழந்தை இயேசுவை இவ்வுலகிற்கு அளிப்பதாக வேண்டினார்.

1862 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அமைதியில் இறந்தார். புனித திருத்தந்தை 23 ஆம் யோவான் இவரை வணக்கத்துக்குரியவர் என அறிவித்தார்.

அப்படி என்ன சிறப்பு?

அதன் பின்னர் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் பணிசெய்வதிலும், நலிவுற்றநிலையில் இருக்கும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ததையும், ஆறுதலான வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவதிலும் தன்னையே முழுமையாக அர்பணித்தார். இவற்றை முழுமையாகவும் ஆர்வத்துடனும் செய்வதற்கு ஆழமான செபத்தில் ஈடுபட்டார். அவள் பாவிகளின் மனமாற்றத்திற்கும், உலகளாவிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்காவும் செபித்தார். 

இயேசுவின் திருஇருதயப் பக்தியானது அவரில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. அவள் இயேசு மரியா திரு இருதயங்களின் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புதியதாக ஒரு அமைப்பை பரிகாரம் என்னும் பெயரில் தொடங்கினார். அதில் ஏழைப் பெண்கள், பட்டு தொழில்செய்பவர்கள், அடிமைப் பெண்கள் இந்த அமைப்பில் சேர்ந்தார்கள். 

நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து அவர் தியானத்தில் ஈடுபட்டார். அவற்றைத் தொகுத்து திவ்ய நற்கருணையில் அளவிடமுடியாத அன்பு என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். பாரிஸ் வெளிநாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணி அமைப்பு ஆசியாவிற்கு குருக்களை அனுப்புவதற்காக திட்டமிருந்தது. அதற்காக பணஉதவி தேவைப்பட்டது. அதனை குருமடத்திலிருந்த அவளுடைய சகோதரர் பவுலினிடம் தெரிவித்தபோது, அவர் புதிய முயற்சியைச் செய்தார் - அது வரலாற்றையே மாற்றியது. 

அவள் தன்னுடைய பரிகாரம் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து, ஒவ்வொருவரும் அகில உலக நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக செபிக்கக்கூடிய மற்றும் வாரத்திற்கு ஒரு முறை பணஉதவி செய்யக்கூடிய 10 புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  

பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு (டெசினையர்), நூறு உறுப்பினர்கள் கொண்ட குழு (சென்டினையர்), ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட குழு (மில்லினையர்) எனப் பிரித்தார். இவ்வாறு இவர்கள் குழுக்களாக சென்று சேமித்தப் பணமானது நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. இவ்வாறு நம்பிக்கை பரப்பு சபை (Propagation of Faith) உருவானது. பின்னர் மே 22, 1922 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொறாம் பத்திநாதர் திருத்தந்தையின் நம்பிக்கை பரப்பு ஆணையமாக இவற்றை அறிவித்தார்.  

வாழும் செபமாலை என்னும் 15 உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஆரம்பித்தார். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நாளைக்கு ஒரு மறையுண்மையிலுள்ள ஒரு பத்தை மட்டும் செபிப்பர். இவ்வாறு அனைத்து மறையுண்மையும் ஒரே நாளில் ஒவ்வொரு குழுவிலும் தியானிக்கப்பட்டு செபிக்கப்பட்டது.  

இவ்வாறு இந்த குழுவானது 1862 ஆண்டு இவரின் இறப்பின்போது பிரான்சில் மட்டும் 1,50,000 குழுக்கள், 22,50,000 நபர்கள் இருந்தார்கள். புனித இரண்டாம் ஜான் பால் அறிவித்த ஒளியின் மறையுண்மைகளுக்கு பிறகு 20 பேர் கொண்ட குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

நாம் என்ன செய்யமுடியும்!

நம்முடைய பங்குகளிலும் இத்தகைய குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு நாளும் ஒரு பொதுவான கருத்தைக் கொண்டு செபிக்கலாம். நற்செய்தி அறிவிப்புப் பணி செய்யும் பலருக்கும் உதவலாம். இவ்வாறு அனைவரும் நற்செய்தி அறிவிப்புப் பணியின் பங்காளர்களாகலாம்.

மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org  என்னும் இணையதள முகவரியில் காணலாம்.

 

Add new comment

17 + 2 =