புனித பிரான்சிஸ் அசிசி

யார் இவர்: இத்தாலி நாட்டில் அசிசிப் பட்டணத்தில் 1182 ஆம் ஆண்டு திரு. பீட்டர் பெர்னான்டோ திருமதி. பீக்கா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். உல்லாசமான பகட்டான ஆடம்பர வாழ்க்கை ஒரு புறமும், ஏழைகளின் மீது அன்பும் அக்கறையும் மறுபுறமும் இவருடைய வாழ்வை அலங்கரித்தது. 

ஒரு உன்னத போர் வீரனாக வேண்டும் என்னும் முனைப்புடன் தனது வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்தார். 1201 ஆம் ஆண்டு போர் செய்யப் புறப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1204 ஆம் ஆண்டு கடினமான நோயினால் பாதிக்கப்பட்டார். மீண்டும் போர் செய்ய புக்லியா என்ற இடத்திற்கு சென்றார். அங்கு புனித தமியானின் ஆலயத்திலிருந்து சிலுவையிலிருந்த இயேசு ஆண்டவர் இவரிடம் பேசினார்: 

“நீ ஏன் ஒரு சிறிதளவும் மதிப்புக் கொடுக்காத இந்த மனிதர்களிடம் இவ்வளவு தாராளமாகவும், அன்பாகவும் இருக்கிறாய். உனக்கு அளவிடமுடியாத அளவுக்கு அன்பும், மதிப்பும் கொடுக்கக்கூடிய ஆண்டவராகிய கடவுளிடம் நீ ஏன் உன் தாராள உள்ளத்தையும், அன்பின் சேவையையும் ஒப்புக்கொடுக்கக்கூடாது? உனது பணி தலைவனுக்கா, சாமானிய மனிதருக்கா?” என்று கேட்டார். உடனே எனது பணி தலைவனுக்கே என்று பதிலளித்துவிட்டு பிரான்சி; அசிசி திரும்பினார்.

1226 அக்டோபர் 3 இல் இறந்தார். திருத்தந்தை 9 ஆம் கிரகோரியாரால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டார். இரண்டாம் கிறிஸ்து என்று திருஅவையால் நினைவுகூறப்படுகிறார்.

அப்படி என்ன சிறப்பு இவருக்கு?

ஏழ்மை என்னும் பெண்ணை மணந்துகொண்டார். ஒருமுறை கசப்பாகவும் அறுவறுப்பாகவும் இருந்த தொழுநோயாளர்கள் இப்பொழுது என் மனதுக்கு இனிமையாக இருக்கிறார்கள் என்கிறார். 

கடவுள் உலகில் வாழும், கிறிஸ்துவை அறிந்த நாடுகளில் மட்டுமல்ல, கிறிஸ்துவை அறியாத நாடுகளிலும் வாழும்,  எல்லா மக்களுக்களின் ஆன்மாக்களையும் மீட்க கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார் என்று கூறுகிறார். எனவே தம் சகோதரர்களை உலகின் நான்கு திசைகளுக்கும் அனுப்பினார். 

1223 ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய இயேசுவின் பிறப்பு காட்சியே, முதல் கிறிஸ்து பிறப்புக் குடில் அமைக்கும் முறையை உருவாக்கியது. இன்று நாம் உருவாக்கும் கிறிஸ்து பிறப்புக் குடில் அனைத்திற்கும் இவரே முன்னோடி.   

அவர் 1224 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அல்வோனியா மலையில் “ஆண்டவரே! நான் இறக்கும் முன் உமது பாடுகளை எம் உடலில் அனுபவிக்க ஆசைப்படுகிறேன்” எனக்குத் தாரும் என்று கூறினார். கடவுளும் அருளினார்.

அவர் உடலில் தாங்கிய ஐந்து காயமும் அவருடைய நம்பிக்கைக்கும் இயேசுவோடு அவர் கொண்டிருந்த ஒன்றிப்புக்கும் அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் சான்றாகும். 

நாம் என்ன செய்ய முடியும்?

நம்முடைய வாழ்வுமுறையை மாற்றியமைக்கவேண்டும். நம்முடைய சொல்லாலும் செயலாலும் நம் வாழ்வுமுறையாலும் நாமே நற்செய்தியாக வேண்டும்.

மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org என்னும் இணையதள முகவரியில் காணலாம்.

 

Add new comment

20 + 0 =