கோவையின் நல்ல சமாரியன்

தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்று எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு நடுவில், கோவையில் இருக்கும் நல்ல சமாரியன் ஒருவர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கும் அவர்களின் காப்பாளர்களுக்கும் தினமும் இலவசமாக உணவு கொடுத்துக்கொண்டு வருகிறார். அவர் தான் ராஜா சேது முரளி. உணவும் கல்வியும் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அதனை தன்னலம் பாராது ஏழை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துக்கொண்டுள்ளார் முரளி.

குடும்பப் பின்னணி:

முரளியின் பெற்றோர், வள்ளியம்மாள் மற்றும் கிருஷ்ணசாமி ஆவர். இவர் பிறந்த ஊர், கோவை மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர். 2 சகோதரர் மற்றும் 2 சகோதரிகளுடன் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார். பின்னர் ஆட்டோ ஓட்டுநரானார். மேலும் இவர் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசியாற சோறு:

ஆட்டோ ஓட்டுநராக இருந்த முரளிக்கு, மனதில் ஏதோ ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. அதனை போக்க சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சத்துணவிற்காக மட்டுமே பள்ளி சென்ற நாட்களையும், உணவில்லாமல் மயங்கி விழுந்த நாட்களையும் எண்ணுகிறபோதெல்லாம்  வேறு யாருக்கும் இந்த நிகழ்வு நடக்க கூடாது என எண்ணி, 'பசியாற சோறு' என்ற ஒரு அமைப்பினை நிறுவி, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கும் அவர்களின் காப்பாளர்களுக்கும் இலவசமாக உணவளித்து வருகின்றார். உணவினை சமைத்து அதை தனக்குரிய ஒரு நீல நிற ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அளித்துவருகின்றார். இதை கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார். நீல நிற ஆட்டோ, தங்களின் பசியை ஆற்ற எப்போது வரும் என எதிர்பார்த்தபடி இவருக்காக மக்கள் காத்திருக்கின்றனர். முதன்முதலாக இரு சக்கர வாகனத்தில் சென்று தான் இவரின் சேவையை செய்துள்ளார். பின்னர் இவரை பார்த்த அந்த ஊர் மக்கள், அவருக்கு என்ன வேண்டும் என கேட்டறிந்து அவருக்கு ஆட்டோ ஒன்றை வாங்கிக்கொடுத்து உதவியுள்ளனர். "அடையாளம் அல்லது அங்கீகாரத்தை எதிர்பார்த்தால் இப்படிப்பட்ட சேவைகளை செய்ய முடியாது" என்கிறார் ராஜா சேது முரளி அவர்கள். உணவு மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான ஆடைகள், குழாய்களுக்கு தேவையான டயாபர்கள், தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் கொடுத்து வருகிறார். அரசு மருத்துவமனை மட்டுமின்றி, அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்று அங்கிருக்கும் மக்களுக்கு மூன்று வேலை உணவளித்து வருகிறார்.  

குழந்தைகளின் வாழ்வில் இவரது பங்கு:

தனது குடும்ப சூழ்நிலையினால் தான் படிப்பறிவு பெற இயலாதது போல, இனி எந்த குழந்தையும், வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணிய முரளி அவர்கள், ஒரு வருடத்தில் சராசரியாக 36 அரசு பள்ளிகளில் பயிலும் 150  குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் 3 குழந்தைகளுடன் இந்த பணியை செய்ய தொடங்கினேன். இன்று 32 அரசு பள்ளிகளில் இருந்து 150 மாணவர்களுக்கு உதவ முடிகிறது. மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் எடுத்தால், அவர்கள் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க முடியும்" என்றார். கடந்த 11 ஆண்டுகளில், சுமார் 1300 மாணவர்களுக்கு இவர் உதவியுள்ளார். கோவையில் உள்ள பள்ளிகளில், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் உதவியுடன், பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களை கண்டுகொண்டு, அவர்களின் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள், பள்ளி சீருடைகள் என அனைத்தும் வழங்கி வருகிறார்.

அன்று, தன்னிடம் இருந்த 5  அப்பங்களையும் 2 மீன்களையும், அந்த சிறுவன் 5000 மக்களுக்காக கொடுத்தான். இன்று, தன்னிடம் இருக்கும் அனைத்தையும், ஏழை மக்களின் பசியை போக்கவும், ஏழை பிள்ளைகளின் படிப்பிற்காகவும் கொடுக்கும் ராஜா சேது முரளி அவர்களின் சேவையை பாராட்டுவோம். இது போன்றோரின் பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.

Add new comment

3 + 8 =