குழந்தை இயேசுவின் புனித தெரசா

யார் இவர்: பிரான்ஸ் நாட்டில் அலென்சோனில் 1873 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 3 ஆம் நாள் திரு. லூயி மார்டின் திருமதி. செலி மார்டின் என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவருடைய திருமுழுக்கு பெயர் மரிய பிரான்சுவா தெரசா மார்டின் என்பதாகும்.

வீட்டின் கடைக்குட்டியாக இருந்ததால் அனைவரின் பாசத்தையும் அணுஅணுவாக அனுபவித்தார். அவருடைய சுட்டித்தனத்தாலும், குறுகுறு சேட்டையினாலும் அனைவரையும் கலகலப்பாக வைத்துக்கொள்வார். அவருடைய தந்தை இவரை செல்லமாக சின்னராணி என்று அழைப்பார். 
படிப்பில் கெட்டிகாரராகவும், குணத்தில் பண்பட்டவராகவும், கீழ்படிதலில் அவருக்கு இணையாக அவரே என்னும் நிலையில் வளர்ந்தார். தன்னுடைய குழந்தை பருவத்தில் தன்னுடைய தாயை இழந்தார்.

குழந்தை இயேசுவை தனக்கு முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். தன்னுடைய முதல் நற்கருணை பெற்ற நாளை இயேசுவின் முதல் முத்தம் பெற்ற நாள் என்று கூறுகிறார். அன்னை மரியாவின் மீது அளவிடமுடியாத பக்தி கொண்டிருந்தார். எனவே அவர் நோயுற்று துன்புற்றபோது அன்னை மரியாள் அவருக்கு காட்சி தந்து அவருடைய துன்பத்தை மகிழ்ச்சியாக மாற்றினார்.

தன்னுடைய 24 ஆம் வயதில் அதாவது 1897, செப்டம்பர் 30  இல், கடவுளே நான் உம்மை அன்பு செய்கின்றேன் என்று கூறி உயிர்துறந்தார்.
1925 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் நற்செய்தி அறிவிப்பு நாடுகளின் பாதுகாவலி என இவரையும், பாதுகாவலராக புனித பிரான்சிஸ்கு சவேரியாரையும் அறிவித்தார்.  

அவருக்கு அப்படி என்ன சிறப்பு?

நான் ஐந்து கண்டங்களுக்கும், அதுவும் மிகவும் தொலைவில் உள்ள இடங்களுக்கு, ஒரே நேரத்தில் இறைவார்த்தையை அறிவிக்க விரும்புகிறேன். நான் ஒரு நற்செய்தியை அறிவிக்கும் பணியாளராக கொஞ்ச காலத்திற்கு இருக்க விரும்பவில்லை. மாறாக படைப்பின் தொடக்கமுதல் காலம் நிறைவுறும்வரை இருக்க விரும்புகிறேன் என தன்னுடைய ஏக்கத்தை தெரிவித்தார். 

எல்லாவற்றிற்கும் மேலாக ஓ என்னுடைய அன்பு மீட்பரே, என்னுடைய கடைசி துளி இரத்தம்வரை உமக்காக சிந்துவேன். மறைசாட்சியாக இறப்பது என்பது என்னுடைய இளமை கால கனவு. வாழ்வின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா புனிதர்களின் எல்லா செயல்களையும் நான் உமக்காக என் வாழ்வில் செய்துமுடிக்க விரும்புகிறேன் என தொடர்ந்து எழுதுகின்றார். 

குழந்தை இயேசுவின் புனித தெரசாவிடம் நற்செய்திக்கான வேட்கை இருந்தது. எனவே தன்னுடைய அழமான செபத்தாலும், அர்த்தமுள்ள எழுத்துக்காளாலும், எடுத்துக்காட்டான வாழ்க்கையாலும் தான் இருக்கும் இடத்தில் மட்டுமல்ல இன்று உலகம் அனைத்திற்குமே நற்செய்தியாக திகழ்கின்றார்.

நாம் என்ன செய்யலாம்!

நாம் படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கமுடியவில்லையென்றாலும், ஒரு மூலையில் இருந்துகொண்டு நம்முடைய ஆழமான செபத்தாலும், எடுத்துக்காட்டான வாழ்க்கையாலும் நற்செய்தியாக மாறமுடியும். 

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org  என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க. 
 

Add new comment

1 + 1 =