வியப்பான செயல்

இது பற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர் - யோவான் 5:28-29. கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போரை, வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம், பாவம், சாவு இவற்றிலிருந்து  விடுவித்துவிடும்.

ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும். கடவுளின் ஆவி நமக்குள் குடிகொண்டிருந்தால், நாம் பாவ வாழ்வை கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்போம். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல.

பாவத்தின் விளைவாக நம் உடல் செத்ததாயினும், கிறிஸ்து நமக்குள் இருந்தால், நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவோம்; அதன் பயனாகத் தூய ஆவி நமக்குள் உயிராய் இருப்பார். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி நமக்குள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே நமக்குள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய நம்மையும் உயிர் பெறச் செய்வார். தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நாம் வாழ்வோம். நாமும் உயிர்த்தெழுவோம். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். 

ஜெபம்: ஆண்டவரே நாங்களும் பாவத்தை வென்று  தூய ஆவியின் துணையோடு உயிர்த்தெழ அருள் தாரும். பலவீனமான நாங்கள் ஊனியல்பை சார்ந்து வாழாது உமது அன்பில் வாழ அருள் புரியும். வழிகாட்டும். ஆண்டவரே என்றும் உம் பிள்ளைகளாக வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

13 + 3 =