பிரிவினைகள் இல்லாமல் வாழலாமா?

அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார் - தொடக்க நூல்  2:7,22.

கடவுள் மனிதனை உண்டாக்கினார். தன் உயிர் மூச்சை அவனுக்குள் செலுத்தி உயிரூட்டினார்.  அந்த ஆதாம் ஏவாளின் வழி வந்தவர்கள் தான் நாம்.  தொழிலால் நாம் வேறுபட்டு இருந்தாலும் நமக்குள் ஓடுவது அந்த இரத்தம் தானே. பின் எப்படி நமக்கும் பிரிவினைகள். நமக்குள் செயல்படும் தேவ ஆவியும் ஒருவர் தானே. நாம் ஒரே கடவுளின் பிள்ளைகள் தான். 

விண்ணக வீடு மட்டுமே நம் இலக்கு. சாதி அல்ல. பின் நமக்குள் ஏன் இந்த வேறுபாடு. ஏன் சண்டை. ஒரே பந்தியில் அமர்ந்து ஒரே கிண்ணத்தில் பருகுகிறோம். ஒரே கடவுளை நம்புகிறோம். நமக்குள் இருக்கும் ஆவியாரும் ஒருவரே.  

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி என்று ஔவையார் சொல்கிறார். இரண்டே சாதிதான். ஒன்று பிறருக்கு கொடுத்து உதவும் பெரியோர். அடுத்தது பிறருக்குத் கொடுக்காத இழிகுலத்தோர்.

செபம்: ஆண்டவரே, உம்மில் உறுப்புகளான நாங்கள் ஒற்றுமையாக வாழ வழி நடத்தும். சாதி என்ற பெயரில் எங்களிடையே பிரிவினையை உருவாக்கும் தீய எண்ணங்களை எங்களை விட்டு அகற்றியருளும். நாங்கள் அனைவரும் உம் பிள்ளைகள் என்பதை உணர்ந்து வாழ அருள்புரியும். ஆமென்.

Add new comment

15 + 4 =