பயமா? இதோ மருந்து...

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும் - எசாயா 35:1. இந்த அதிகாலை வேளையிலே ஆண்டவரின் முன்னிலையில் தளர்ந்துபோன நம் கைகளை நாம்  திடப்படுத்தி அவரை நோக்கி உயர்த்துவோம். தள்ளாடும் நம் முழங்கால்களை உறுதிப்படுத்தி இன்னும் அதிகமாக ஜெபிப்போம். 

உள்ளத்தில் உறுதியற்றவர்களாகிய நாம்  திடன் கொள்ளுவோம், அஞ்ச வேண்டாம். இதோ, நம் கடவுள்  வந்து நம்மை விடுவிப்பார். வளமான வாழ்வை நமக்கு தருவார். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் நாம் நம் கண்களால் காண்போம் என்று நம்புவோம். அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.

அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். உலகம் கொடுக்காத ஒரு அமைதி. ஒரு சந்தோசம் நமக்குள் ஏற்படும். அப்பொழுது பாலவெளி போல் இருக்கும் நம்வாழ்வு பூத்து குலுங்கும். அந்த நாள் நினைத்து பார்க்க முடியாத நிறைவை நமக்கு கொடுக்கும். அந்த நாளுக்காக ஜெபிப்போம்.

ஜெபம்: ஆண்டவரே இந்த அதிகாலை வேளையில் உம்மை நோக்கி எங்கள் கைகளை உயர்த்துகிறோம். எங்கள் முழங்கால்களை முடக்குகிறோம். எங்கள் நாவினால் கோடி நன்றி பாடுகிறோம்.  அன்பு நேசரே. எங்களுக்கு சீயோனுக்கு செல்லும் தூயவழியை காட்டும்.அந்த பாதையில் வழி தவறாது உம்மை பின்பற்றி நடக்க உதவி புரியும்.  ஆமென்.

Add new comment

5 + 2 =