நோன்பும் மனநிலையும்

நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள் - எசாயா 58:3. நாம் நம்மை  ஒடுக்கிக் கொண்டு, தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொண்டு இருப்பது ஆண்டவருக்கு ஏற்ற நோன்பு அல்ல.

வீட்டில் சமாதானமில்லாமல் வீண் சண்டையிட்டு கொண்டு, பிறரை வார்த்தைகளால் தாக்கி துன்புறுத்தி கொண்டு நாம்  உண்ணா நோன்பிருந்தால் நமது குரல் உன்னதத்தில் கேட்கப்படாது. பிறருக்கு கொடுமை செய்யாது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து, அன்பாக நடந்து கொள்ளவேண்டும். சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்த வேண்டும்.

பசித்தோர்க்கு  உணவைப் பகிர்ந்து கொடுத்து,  உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுத்து, முகங்கோணாது  பிறரை தன்னை போல் அன்பு செய்து வாழ்வது  தான் ஆண்டவர் விரும்பும் நோன்பு. இவற்றை முதலில் நம் குடும்பத்தில் ஆரம்பிப்போம். கணவன், மனைவி, பிள்ளைகள், மாமியார், மாமனார், மருமக்கள், பேரப் பிள்ளைகள் என நம் உறவுகளுக்குள் செய்வோம். பின்னர் வெளியே தொடருவோம்.

அப்படி செய்வோமானால்  நம் ஒளி விடியல் போல் எழுந்து விரைவில் நமக்கு நலமான வாழ்வு அமையும்; ஆண்டவரின் மாட்சி நம்மை பின் தொடர்ந்து வந்து  காக்கும். நாம் கூப்பிடும்போது ஆண்டவர் நமக்கு பதில் கொடுப்பார். ஆண்டவர் தொடர்ந்து நம்மை வழிநடத்துவார்; வறண்ட காலத்தில் நமக்கு நிறைவளிப்பார்; நம் எலும்புகளை வலிமையாக்குவார்;  நீர் பாய்ந்த தோட்டம்போலும், வற்றாத நீரூற்றுபோலும் நம்மை வாழவைப்பார்.

செபம்: அன்பு ஆண்டவரே, உம் விருப்பம் அறிந்து, பிறரை அன்பு செய்து, உதவி செய்து, பிறரோடு பகிர்ந்து வாழும் நல்ல மனதை எங்களுக்கு தாரும். இந்த நாட்களில் நாங்கள் உம்மை அதிகமாக தேடவும், உம் வார்த்தைகளுக்கு பணிந்து நடக்கவும் தூய ஆவியின் துணை தாரும். உமது வல்லமையை பெற்று இன்னும் அதிகமாக, சாட்சியான  வாழ்வு வாழ்ந்து, எங்களில் உம்மை பிரதிபலிக்க அருள்தாரும். ஆமென்.

Add new comment

15 + 0 =