நாம் தந்தையின் பிள்ளைகளா! | அருட்தந்தை அருண்

நீ என் மகன் இன்று நான் உனது தந்தை ஆகினேன் 

திருப்பாடல்கள் 2: 7

இறை இயேசுவில் அன்புக்குரிய இனிய மக்களே, இறைவனின் அருளும் ஆசீர்வாதமும் என்றும் உங்களோடு இருப்பதாக.  நீ என் மகன் இன்று நான் உனது தந்தை ஆகினேன்  என்ற இறை வார்த்தையானது மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டதாக இருக்கின்றது.  இன்று நாம்  தியானிக்கும்,   திருப்பாடல் 2: 7 வது இறை-வார்த்தையில், இறைவனின்  அளப்பரிய  அல்லது மாபெரும் மன்னிக்கும் குணத்தை வெளிப்படுத்துவதாக நான் அறிகின்றேன். எவ்வாறு  அல்லது எப்படி என்று பார்க்கின்றபோது,  இவ்வுலகைப் படைத்து அதில் உள்ள உயிரினங்களையும் குறிப்பாக,  மனித இனங்களையும் ஆசீர்வதித்து, பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று இறைவன் நமது மூதாதையர் ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோருக்கு கூறியபோதே ,  இறைவன் நமது தந்தை என்றும் நாம் அவரது பிள்ளைகள்” என்ற உரிமையை நமக்கு கொடுத்தார்.   ஆனால் ,  பாவத்தின் பொருட்டு தந்தை-மகன்  மற்றும் தந்தை-மகள் என்ற உரிமையை நாம் இழந்தோம்.  இருப்பினும், இறைவன், நமக்காக இருகரம் விரித்து காத்துக்கொண்டிருக்கிறார்;  எப்போது எனது மகன், எப்போது எனது மகள்  என்னிடம் வருவார்கள் என்று ஆவலாய் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.  லூக்கா நற்செய்தி (15)  பதினைந்தாம்  அதிகாரத்தில் 

ஊதாரி மைந்தன் உவமையை வாசிக்க கேட்கின்றோம். தனது மகன் எப்படிப்பட்டஊதாரித்தனமாக,பாவ வாழ்க்கையிலே  வாழ்ந்தான் என்று அறிந்தும்,  இருப்பினும்,  தனது மகனின்   வருகைக்காகவும் மற்றும் மனம்மாறி என்னிடம் எனது மகனாக வரமாட்டானா என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்த அந்த அன்புத் தந்தையின் குணத்தை போல் பல்லாயிரம் மடங்கு அன்பையும் பாசத்தையும் தன்னகத்தே கொண்டு நமக்காக காத்திருப்பவர் தான் நமது வானகத் தந்தை என்று இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு இந்த ஊதாரி மைந்தன் உவமையின் மூலமாக அறிவுறுத்துகின்றார். ஆக, நாம்  நமது தந்தையிடம்,  நமது இறைவனிடம்  எவ்வித தயக்கமும் இன்றி அவரை நோக்கிச் செல்கின்ற போது இறைவன் நம்மை அவரது மகனாக,  அவரது  மகளாக ஏற்றுக் கொண்டு நமது தந்தையாக அவர் மாறுகின்றார்.  நாம் அந்த தந்தை-மகன்,  தந்தை-மகள் என்ற உரிமையை  மீண்டும் பெறுகின்றோம் என்கின்ற நம்பிக்கையில்  தொடர்ந்து மன்றாடுவோம்,  இறைவன் நம்மை முழுமையாக   ஆசீர்வதித்திடவும் “இறைவன் நமது தந்தையாகவும்  நாம் அவரது பிள்ளைகளாகவும்”  வாழ்ந்திட முற்படுவோம்.ஆமென்.

அருட்தந்தை அருண் sdc.

ஸ்பெயின்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Add new comment

6 + 2 =