ஜெபவீரர்களைத் தெரியுமா

இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே - 1 தெசலோனிக்கர் 5:17-18. இன்று நாம் இறைவனிடம் ஜெபித்த  ஒரு சிலரையும் அவர்களது சூழ் நிலைகளையும் பற்றி பார்ப்போம். சாமுவேல் போல சிறுபிள்ளையாக ஆண்டவரே பேசும் உம் அடியேன் நான் கேட்கிறேன் என அவருடைய வழி நடத்துதலுக்காக  ஜெபிப்போம்.

பவுலும் சீலாவும் நள்ளிரவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையிலும்பயமின்றி துதித்தது போல கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி நம் பாதைகள் திறக்கப்பட வேண்டுவோம். யோசபாத் அரசன் மக்களோடு சேர்ந்து ஆபத்து காலத்தில் ஜெபித்தது போல நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் சமாதான வாழ்வுக்காக ஜெபிப்போம். தானியேல் மூன்று வேளையும் அயராது ஜெபித்தது போல ஆபத்துகளின்று தப்புவிக்க  வேண்டி  அனுதினமும் ஜெபிப்போம். தாவீதை போல மகிழ்ச்சியோடு நடனமாடி  துதி கீதங்களோடு  முழு உள்ளத்தோடு  ஆண்டவரை மகிமை படுத்துவோம். யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்தது போல நாமும் நம் நண்பர்கள், உறவுகள், சுற்றி இருப்போருக்காக ஜெபிப்போம். 

அன்னாள் பிள்ளை க்காக மனங்கசந்து அழுதது போல பிள்ளை பேற்றுக்காக, நம் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக அழுது ஜெபிப்போம். சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு  தான் கட்டிய ஆலயத்தில் ஆண்டவர் தங்க வேண்டும் என ஜெபித்தது போல நம்முள்ளம் எனும் ஆலயத்தில் ஆண்டவர் தங்க  சொல்லி, மன்றாடுவோம். எலியேசர் ஈசாக்குக்கு பெண் பேச செல்லும் முன், எனக்கு இன்று வெற்றி அளித்தருளும் ஆண்டவரே என்று ஜெபித்தது போல ஒரு செயலை செய்ய தொடங்குமுன்  ஆண்டவருடைய இரக்கத்தை கேட்டு மன்றாடுவோம்.

மோயிசன் இஸ்ரேல் மக்களின் விடுதலைக்காகவும் சமாதான வாழ்வுக்காகவம்  கடவுளிடம் பரிந்து பேசியது போல நாமும் சிறைச்சாலையில் இருப்போர், பாவத்தால் கட்டுண்டோர், நோயாளிகள், கைவிடப்பட்ட மக்கள், அனாதைகள் என அனைவருக்காகவும் பரிந்துரை செய்வோம். ஸ்தேவான் இறக்கும் நேரத்தில் அவரை துன்புறுத்திய மக்களுக்காக ஜெபித்தது போல நமக்கு தீங்கு செய்வோரை மன்னிக்க வேண்டி மன்றாடுவோம். சிமியோன் சொன்னது போல உம் மீட்பை என் கண்கள் கண்டது என்னை சமாதானத்தோடு போக விடும் என நல் மரணத்துக்காக வேண்டுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டவர் இயேசுவை போல அதிகாலை கருக்கலிலே பிதாவை நோக்கி ஜெபித்து புது பலம்   பெற்று  கனிதருவோம். 

ஜெபம்: ஆண்டவரே ஜெப ஆவியை எங்கள் மேல் ஊற்றியருளும். என்ன நடந்தாலும் எது நடந்தாலும் உம்மை துதிக்கும் மனதை எங்களுக்கு தாரும். கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் உம்மை துதித்து மகிழ வரம் தாரும். ஆமென்.

Add new comment

8 + 7 =