என் அன்பு எது?

எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது - மத்தேயு 6:24. ஆண்டவராகிய இயேசு நீங்கள் பணத்துக்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்ய முடியாது என்கிறார். பணத்துக்கு அடிமையாக இருந்தோம் என்றால் அதை எப்படி சம்பாதிப்பது, எப்படி சேர்த்து வைப்பது, எப்படி பாதுகாப்பது என்பதில் தான் நம் கவனம் இருக்கும். பணமிருக்கும் இடத்தில் தான் நம் கவனம் செல்லும்.

பணம் நமக்கு தேவைதான். ஆனால் பணத்தின் மீது மிக அதிக கவனம் செல்லும் போது நாம் கடவுளை மறந்து விடுவோம். ஞாயிறு திருப்பலி நினைவுக்கு வராது. பிறருக்கு உதவிசெய்யணும். பிறரை அன்பு செய்யணும், நம் வாழ்வில் கிருஸ்துவை பிரதிபலிக்கணும் என்ற விழுமியங்களை விட்டு தூரப்போய் விடுவோம். ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போம். வானத்து பறவைகளையும் வயல்வெளி மலர்களையும் பார்க்கிலும் நாம்  மேலானவர்கள் அல்லவா!

இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லை அழகு செய்கிற கடவுள் நமக்கு இன்னும் அதிகமாகச் செய்யமாட்டாரா? இவை யாவும் தேவை என விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆபிரகாம் தன் தந்தை வீட்டை விட்டு வெளியே வரும் போது அவர் கையில் ஒன்றும் கிடையாது. கடவுள் அவருக்கு நிலபுலன்கள் ஆடு  மாடுகள் கொடுத்ததோடு அவருடைய சந்ததியையும் பெறுக செய்கிறார். ஆபிரகாம் ஆண்டவரை மட்டும் தான் நம்பினார். அவருக்கு மட்டும் தான் பணி செய்தார். அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் கீழ் படிந்தார்.

ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம். அப்போது இவையும் சேர்த்துக் கொடுக்கப்படும்.  நம் வாழ்வுக்கு தேவையான எல்லாவற்றையும் அவர் பார்த்து கொள்வார். 

ஜெபம்: ஆண்டவரே உம் மீது நம்பிக்கை வைத்து உமக்கே பணிபுரிந்து இம்மைக்குறிய செல்வங்களையும், நிலை வாழ்வின் பேறுகளையும் முழுவதுமாக பெற்று வாழ வரம் தாரும். ஆமென்.

Add new comment

14 + 6 =