உதவி செய்துதான் பார்ப்போமே

"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” - மத்தேயு 10:42. ஆண்டவருடைய நற்செய்தியை பின்பற்றுவோர் அறிவிப்போர் அனைவருமே அவருடைய சீடர்கள் தான். அப்படிப்பட்ட ஒருவருக்கு நாம் ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பதால் அதன் வழியாக கூட   அதன் பலனை பெற்று விடுவோம் என்று ஆண்டவர் கூறுகிறார்.

யோசுவா எரிகோவை உளவு பார்க்க தன் தூதர்களை அனுப்புகின்றார். அவர்களுக்கு விலைமாது இராகாப் மறைந்திருக்க உதவி செய்ததோடு அவர்களை காட்டி கொடுக்காமல் தப்பி செல்ல வழியும் காட்டுகிறார். அதன் பின் இஸ்ரேல் மக்கள் எரிக்கோ வந்த பிறகு இராகாபை அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார்.  

இராகாப் அன்று செய்த உதவி பின் நாளில் அவர் மொத்த குடும்பத்தையும் காத்தது. எலியாவுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து உதவிய சாரிபாத் ஊர் விதவைக்கும் கைம்மாறு கிடைத்தது. அந்த நாட்டில் பஞ்சம் தீரும் வரை அந்த பெண் வீட்டில் இருந்த பானையில் மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெய் குறையவுமில்லை. நாம் சிறு உதவி செய்தாலும் அதற்கான பலனை பல மடங்காக  கடவுள் நமக்கு தந்து விடுவார்.  

ஜெபம்: இருகரம் விரித்தவராய், உம் இதயத்தையே திறந்தவராக எங்களுக்காக காத்திருக்கும் எங்கள் அன்பு ஆண்டவரே அப்பா இந்த அதிகாலை வேளையில் உம்மை தேடி வந்துள்ளோம். எங்களை அசீர்வதியும். நாங்கள் பிறருக்கு கொடுக்கும் நல்ல மனதுடன் வாழ அருள் புரியும். கொடுப்பதன் மூலம் இன்னும் அதிக ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள அருள் தாரும். ஆமென்.
   

Add new comment

15 + 3 =