Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் முதல் இறுதி வார்தை - லூக்கா 23:24
தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை. சாக்ரடீஸ் தான் விசம் அருந்தி இறக்கப்போகிறோம் என்று அறிந்தபோது புதிய தலைமுறைக்காக நம்பிக்கையோடு இருக்கிறார், அதேவேளையில் கண்ணீர் வடிக்கிறார். ஆனால் இயேசு கண்ணீர் வடிக்கவில்லை. மாறாக தம் வாழ்வின் இறுதியில் சிலுவை மரத்தை ஒரு மலைப்பொழிவாக மாற்றினார்.
இயேசுவின் சிலுவைக்கு அருகில் நின்றவர்கள்: இவர் இறங்கி வருவாரா, இறைமகன் என்று நிருபிப்பாரா; கண்ணீர் வடிப்பாரா, மன்னிப்புக் கேட்பாரா; மெசியாவாக வருவாரா என்று காத்திருந்தனர். ஆனால் இயேசு எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டி, தன்னுடைய வார்த்தைகளைக் கொடுக்கிறார். அவருடைய வார்த்தைகள் நமக்கு சவால்.
அவர் சிலுவையில் அழவில்லை, ஆனால் சிலுவையில் அறையப்பட்டவர்கள் அழுதார்கள். செனகா போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் சிலுவையில் அறையப்பட்டவர்களின் நாக்கு அறுக்கப்படும் எனப் பதிவுசெய்கிறார்கள். காரணம் அவர்கள் சிலுவையில் தெய்வ நிந்தனை செய்வார்கள் என்பதால். ஆனால் இயேசு யாரையும் நிந்திக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை. மாறாக தன்னுடைய முதல் இறுதி வார்த்தையைக் கொடுக்கிறார்: லூக்கா 23:24 - தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை.
யாரை மன்னிப்பது? இவரைக் கேலிசெய்தபோதும், மன்னிக்கும் மனம் இவருக்கு வந்தது, சந்தன மரத்தை வெட்டுபவர்களுக்கு அது மணம் தருவதுபோல. யூதாசையா, பேதுருவையா, பிலாத்துவையா, சீடர்களையா, பரிசேயர்களையா, ஏரோதியர்களையா, ஓசன்னா என்று பாடியபின் சிலுவையில் அறையும் என்று கத்தியவர்களையா. தவறுசெய்தவர்கள் அனைவரையும் மன்னித்தார்.
நம்முடைய பாவங்களுக்காக பழைய ஏற்பாட்டில் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாக, தன்னை இந்த புதிய ஆட்டுக்குட்டி திருத்தூயகமாகிய விண்ணகத்திற்கு நம்முடையக் குற்றங்களை சுமந்து செல்கிறது. ஆபேலின் இரத்தம் கடவுளிடம் நீதி கேட்டது. ஆனால் இவருடைய இரத்தம் நீதிக்கேட்டு நிற்கவில்லை, மாறாக மன்னிப்புக் கேட்டு நிற்கிறது.
மன்னிப்பது என்பது எளிது மற்றும் கடினம். தொடர்பு இல்லாதவர்களை மன்னிக்கலாம், நம்மோடு தொடர்பில் இருப்பவர்களை மன்னிப்பதுக் கடினம். மன்னிக்கிறேன் மறக்கமாட்டேன் என்பவர்கள் பழைகாலத்திலேயே வாழ முயலுகின்றார்கள். புதிய வாழ்வில் மன்னிப்போம் மறப்போம், புதிய வாழ்வில் பயணிப்போம்.
Add new comment