இப்படி தொடங்குனா செம

யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து, லூசு’ என்று வழங்கிய அந்த நகருக்குப் ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார் - தொடக்க நூல் 28:18-19. பெத்தேல் என்றால் இறைவீடு என்று பொருள். யாக்கோபு அதிகாலையில் எழுந்து முதல் வேலையாக கடவுளை வேண்டுகிறார். 

மேலும் அவர் நேர்ந்து கொண்டது: ‘கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து, என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செல்வேனாயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார். அந்த வேண்டுதலை கடவுள் கேட்டார். இயேசு அதிகாலையில் தனிமையான இடத்துக்கு சென்று தந்தையோடு பேசினார். இறைவனோடு உறவு இன்னும் ஆழப்படுத்திக் கொண்டார்.  

அவருக்கு மானிட மீட்பு குறித்து எவ்வளவோ வேலை இருந்தது. தந்திர புத்தியுள்ள சதுசேயருக்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டி இருந்தது. தந்தையோடு அன்பு உறவாட வேண்டி இருந்தது. நமக்காக பரிந்துபேச வேண்டி இருந்தது. எனவே அதிகாலை கருக்கலில் தந்தையோடு பேசினார். நாமும் நம் நாளின் முதல் மூச்சை முதல் நிமிட துளிகளை பரம தந்தைக்கு ஒப்பு கொடுப்போம். நிறைய வேண்டாம். சின்ன ஜெபம்  சொல்லலாமே.  இந்த பொல்லாத பாவம் பெருகி வரும்  உலகில் நாம் பரிசுத்தமாக வாழ சிறிது நேரம் ஜெபிக்கலாமே. இரவு படுத்தவர்கள் நிறைய பேர் விடியலை காண்பதில்லை. நம்மை உயிரோடு எழுப்பிய கடவுளுக்கு ஒரு நிமிடம் நன்றி சொல்லலாமே. 

நாம் எதன் மேல் அதிக நாட்டம் கொண்டுள்ளோமோ அதை தான் முதலில் செய்வோம். இன்று முதல் ஆண்டவருக்கு கொடுப்போம். ஆண்டவரே நன்றி. இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன் என்று முதல் நிமிடத்தை கடவுளுக்கு ஒப்புகொடுப்போம்.

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி. காலை தோறும் எங்களை எழுப்புபவரே உமக்கு நன்றி. இந்நாளில் நான் செய்யும் எல்லாவற்றிலும் என்னோடு இரும். காத்து கொள்ளும். உம் பிள்ளையாக வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

2 + 0 =