ஆயர்தமாய் செய்துவைப்பவர்

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! - திருப்பாடல்கள் 31:19. ஆண்டவர் நமக்காக மேன்மையான காரியங்களை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே நமக்காக எல்லாவற்றையும் உண்டுபண்ணி விட்டார். "தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை" என்று ஏசாயா சொல்லுகிறார்.

பஞ்சகாலத்திலே எலியாவுக்கு உணவு கொடுப்பதற்காக காகங்களையும், சாரிபாத் விதவையையும் ஆயத்தப்படுத்தியிருந்தார். அவருடைய வார்த்தைகளைக் கேட்க வந்த மக்களுக்கு உணவு கொடுக்கும்படி ஒரு சிறு பையனுடைய ஐந்து அப்பமும் இரண்டு மீனும் கிடைக்கும்படி அந்த சிறுவனுடைய உள்ளத்தையும் ஆயத்தப்படுத்தியிருந்தார்.

கடவுள் நமக்கு ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படாது. செவிக்கு எட்டாது; மனித உள்ளமும் அதை அறியாது. ஆனால் கடவுள் அவைகளைத் தமது  தூயஆவியினாலே வெளிப்படுத்துக்கிறார். உலகம் தோன்றியது முதல் நமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ள  அவரால் அழைக்கப்பட்ட பிள்ளைகள் நாம்.  

நம்மை பரிதவிக்க விடமாட்டார். நாம் அழிவு காண விடமாட்டார். நமது கண்களுக்கு இன்று அது தெரியாமல் இருக்கலாம். ஆனால் விரைவில் நமக்கென வைத்திருப்பதை நமக்கு தருவார். குழந்தை பாக்கியத்தை தருவார். நல்ல வேலையை தருவார். நல்ல திருமண வாழ்வை தருவார். கடனின்றி வாழ வழி செய்வார். நோயற்ற வாழ்வை தருவார். நம்பினோர் நலம் காண்பர்.

செபம்: ஆண்டவரே உம்மையே நம்பி இருக்கிறோம். உதவி உம்மிடம் இருந்து வரும் என எதிர்பார்த்து இருக்கிறோம். எங்கள் வாழ்வில் நாங்கள் இழந்த ஆசீர்வாதத்தை திரும்பபெற அருள் புரியும்.  உம்மிலே நிறைவு காண வழி செய்யும். ஆமென்.

Add new comment

6 + 13 =