அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார் - உரோமையர் 8:26. ஆவியானவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார். நம்முடைய வலுவற்ற நிலையிலும், உடல் நோயிலும், நம்முடைய துக்கங்கள் இயலாமைகள் என எல்லா நேரங்களிலும் நம்மோடு இருந்து நம்மை நடத்துகிறார். 

நமக்கு ஆண்டவரிடம் ஜெபிக்க தெரியவில்லை என்றாலும் அவர் சமூகத்தில் அமைதியாக அமர்ந்திருந்தால் மட்டும் போதும். ஆவியானவர் நமக்காக பரிந்து பேசுவார். 

நம்முடைய கஷ்டங்களில், துக்கங்களில். நோய்களில்  நமக்கு ஜெபிக்க தோணாது. அடுத்து என்ன நடக்குமோ என தவிப்போம். அந்த நேரங்களில் நம்மிடமிருந்து வெளிப்படும் பெருமூச்சுகளின் மூலமாக ஆவியானவர் பேசுவார். நம் பெருமூச்சுகளே ஜெபங்களாக மாறும். ஆண்டவரவற்றை அறிந்து நமக்கு உடனே பதில் கொடுப்பார். 

பாதைகளை காட்டுவார். உதவிகளை கட்டளையிடுவார். தப்பி போக வழி சொல்லுவார். தாண்டி செல்ல அறிவுரை சொல்லுவார். கூடவே இருப்பார். நம்ம கூடவே நடப்பார். அவர் அன்பின் தேவன். இரக்கத்தின் ஊற்று. 

ஜெபம்: அன்பின் தெய்வமே. உம்மை ஆராதிக்கிறோம்.  இரக்கத்தின் ஊற்றே, இனிய என் நேசரே, நித்திய பிதாவே உம்மை வணங்குகிறோம். எங்களுடைய வாழ்வின் எல்லா நேரங்களிலும் எங்களோடு இரும். ஆவியானவரே எங்களுக்காக பரிந்து பேசும். ஆமென்.

Add new comment

4 + 4 =