அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம் - திருப்பாடல்கள் 95:2. ஆண்டவர் ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனையோ நன்மைகளை நமக்கு செய்து வருகிறார். அவர் நன்றியுள்ள உள்ளத்தை விரும்புகிறார். பத்து தொழுநோயாளிகளை குணப்படுத்தின போது ஒருவர் மட்டுமே வந்து நன்றி சொன்னார். அப்போது இயேசு  மத்த ஒன்பது பேர் எங்கே என்று கேட்கிறார். 

அதிகாலையில் உயிரோடு எழுப்புவதற்கு நன்றி  சொல்லுவோம். ஒவ்வொரு நாளும்  உணவு, உடை கொடுத்து, ஒன்றும் இல்லாத  நம்மையும் வாழ வைத்து கன்மலையின் மீது காலூன்ற வைக்கிறவருக்கு நன்றி சொல்லுவோம்.  வழி தெரியாது நிற்கும் நமக்கு பாதை காட்டும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். நாம் நன்றி சொல்ல சொல்ல அவர் இன்னும் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.  

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

உரை: எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு வழியே இல்லை.

ஜெபம்: ஆண்டவரே உமக்கு நன்றி . எல்லாவற்றையும் எங்களுக்காக நேர்த்தியாக செய்து வருவதற்காக உமக்கு நன்றி. உமது அன்பு கடலை விட ஆழமானது ஆண்டவரே. உம் இரக்கம் வானை விட உயர்ந்தது.  உம் பாதுகாப்பு தாயின் அரவணைப்பை போன்றது. உமக்கு நன்றி. இந்த நாளிலும் உம் அருகாமையை எங்களுக்கு தாரும். ஆமென்.

Add new comment

2 + 1 =