அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது - தொடக்க நூல் 1:31. நம் ஆண்டவர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து படைத்தார். ஒவ்வொரு படைப்பின் இறுதியிலும் அது நல்லது என கண்டார். அவருடைய படைப்பின் செயலில் எந்த குறையையும் அவர் காணவில்லை. எல்லாவற்றிலும் திருப்தி அடைந்தார். முழுமையாக செய்து முடித்தார்.

நாம் என்ன செய்கிறோம். நமக்கு கொடுத்த பணிகள் எல்லாவற்றிலும் நிறைவு காண்கின்றோமா? அலுவலக பணிகள், வீட்டு வேலைகள், நற்செய்தி பணிகள், நமது பிற வேலைகள், இவற்றில் முழுமையாக செய்கிறோமா? .முழுவதும் திருப்தி தரும் அளவில் செய்து முடிக்கிறோமா?

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு 

கொள்ளாத கொள்ளாது உலகு.

உரை: தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். தவறின்றி நிறைவு தரும் அளவில் செய்ய வேண்டும்.

ஜெபம்: ஆண்டவரே எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகள் , பணிகள் இவற்றில் சரிவர செய்து அதில் நிறைவு காண அருள் தாரும். இன்றைய நாளில் எங்களையும், எங்களோடு பணி செய்யும் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். ஆமென்.

Add new comment

1 + 11 =