அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14). 326 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாளில் இருந்து  திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழா கொண்டாடப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருச்சிலுவையின் மகிமை விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருச்சிலுவை: 
1.  சிலுவை இயேசு நம்மீது வைத்த அன்பை காட்டுகிறது.
நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார் (உரோ 5: 7-8).

2.  சிலுவை பாவத்திலிருந்து நமக்கு விடுதலை தந்தது.
நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும் (உரோமையர் 6:6).

3. சிலுவையினால் மாட்சி கிடைத்தது.
ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள், ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள் (திருத்தூதர் பணிகள் 2:36).

4. சிலுவை என்பது மீட்பு அளிக்கும் வல்லமை. 
சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை (1 கொரிந்தியர் 1:16).

5. சிலுவை இயேசுவின் கீழ்படிதலை காட்டுகிறது ( தாழ்ச்சி).
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலிப்பியர் 2:8).

6. சிலுவையினால் வேறுபாடு  நீங்கி ஒருமைப்பாடு. 
துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார் (எபேசியர்  2:16).

7. சிலுவை என்பது அவமானத்துக்கு உரியது அல்ல. பெருமை பாராட்டத்தக்க வெற்றியின் அடையாளம். 
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன் (கலாத்தியர்   6:14).

சிலுவை நமக்கு மீட்பின் சின்னமாக, வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் சிலுவையை துன்பமாகப் பார்க்கின்றோமா? அல்லது துன்பங்களையும் தாங்கிக்கொண்டு மீட்பைப் பெற்றுத்தந்த இயேசுவின் சிலுவையை வெற்றியின் சின்னமாகப் பார்கின்றோமா? “திருச்சிலுவை மரமிதோ, இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம்” என்பதன் மூலம் சிலுவையினாலே நமக்கு மீட்பு வந்தது, சிலுவையினாலேயே நமக்கு சிம்மாசனம் வந்தது 

ஆகவே, திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடும் இன்று, நாம் திருச்சிலுவைக்கு தகுந்த மரியாதை செலுத்துவோம். இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வில் வரும் சிலுவைகளைத் துணிவோடு ஏற்றுக்கொள்வோம். இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Add new comment

11 + 0 =