அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து, தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ஆழமான உண்மை. மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. மரியன்னையின் பிறப்புவிழா (செப்டம்பர் 08). 

திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

பல நேரங்களில் கடவுளின்  விருப்பத்தை மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அன்னை இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் 

1. கீழ்படிதல்
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
லூக்கா 1:38

2  . தாழ்ச்சி
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
லூக்கா 1:40

3. உதவும் மனப்பான்மை
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
லூக்கா 1:52

4.பரிந்து பேசும் குணம்.
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
யோவான்     2:3 

மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே எப்போதும் மகிழ்ந்திருந்தார். 

அதனால்தான் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்துகின்றார்.  நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது  இறைவனால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்
 

Add new comment

4 + 0 =