Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
Related beyond space and time | இறந்தவர்கள் செபிக்கமுடியுமா? | Mariyan
இறந்தவர்கள் செபிக்கமுடியுமா? நாம் இறந்தவர்களுக்காகச் செபிக்க முடியுமா? என்ற கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன. அதற்கான விடைகளைத் தேடிக்கொண்டே இருக்கின்றோம். என்னுடைய தேடலில் நான் உணர்ந்துகொண்டது என்னவென்றால் நாம் இறந்தவர்களுக்காக செபிக்கலாம், அவர்களும் நமக்காகச் செபிக்கமுடியும். நம்முடைய செபத்தின் வழியாக நாம் கடவுளை நெருங்கிச் செல்கிறோம் அல்லது எவையெல்லாம் நம்மை கடவுளுக்கு நெருக்கமாக எடுத்துச்செல்கின்றதோ அவையெல்லாம் செபம் என்கிறோம்.
எல்லாருக்கும் செபம் அவசியம். எனவேதான் இயேசு செபிக்க கற்றுக்கொடுத்துவிட்டுச் செல்கிறார். அந்த செபத்தினால்தான் பல்வேறு மக்கள் வாழ்வதற்கான தைரியத்தைப் பெறுகிறார்கள். செபத்தின் தன்மை என்னவென்றால்,
ஒன்று, அவை காலத்தையும் (Time), இடத்தையும் (Space) கடந்தது. எனவேதான் உரோமையிலிருக்கும் திருத்தந்தையும், அமெரிக்காவில் இருக்கும் குருவானவரும், ஐரோப்பாவில் இருக்கும் நம்முடைய உறவினரும் ஒரே நேரத்தில் நமக்காக செபிக்கிறார்கள் என்பதை நம்புகிறோம். வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்களிடம் நமக்காகச் செபிக்க கேட்கிறோம்.
இரண்டாவது, நாம் அனைவரும் அரச குருத்துவ திருக்கூட்டம் (We are the Pilgrim People of God). நாம் தனிமனிதர்கள் அல்ல, கடவுளின் திருக்கூட்டத்தினர். அப்படியென்றால் நம்முடைய இறப்பு என்பது நம்மை இந்த திருக்கூட்டத்தின் உறுப்பினர் என்ற உரிமையை எடுத்துவிடுவதில்லை.
ஆக, நாம் எங்கிலிருந்தாலும் கடவுளின் திருக்கூட்டத்தின் உறுப்பினர்கள், இந்த உறுப்பினர்களை காலத்தையும் இடத்தையும் கடந்து சன்னதியில் சங்கமிக்க வைப்பது செபம். எனவே நாம் அவர்களுக்காகவும் அவர்கள் நமக்காகவும் செபிப்பதை யாராலும் தடுக்க இயலாது.
Add new comment