தம்மைதாமே முன்னோக்கி இயக்குபவர்கள் தலைவர்கள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 14

நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் யாரோ ஒருவர் வந்து நமக்கு உற்சாகம் கொடுத்து நம்மை நம் பாதையைத் தெளிவுப்படுத்துவார் என்று காத்திருப்போர்தான் அதிகம். ஆனால் உண்மையில் அப்படி ஒருவர் வரப்போவதில்லை. ரோடே இல்லாத ஊர்ல, சொகுசு பேருந்து எப்ப வரும்ன்னு காத்திருப்பதுபோலதான் இதுவும். 

2 சதவீதம் மக்கள் தாங்களாகவே வேலை செய்கிறார்கள் அவர்களை பார்வையிடுவதற்கு யாரும் தேவையில்லை. அவர்களைதான் நாம் தலைவர்கள் என்கிறோம். நாம் செய்யவேண்டியதை நாம் சரிவர செய்துகொண்டே இருக்கவேண்டும். யார் வந்தாலும் சரி, யார் பார்த்தாலும் சரி.

நாம் என்ன செய்யலாம். எப்போதுமே நாம் நம்மை ஒரு வழிகாட்டியாக, முன்மாதிரியாக சித்தரித்து, அந்த நிலையில் நம்மையே நாம் உயர்த்தி வைத்திருக்கவேண்டும். அப்படியென்றால் மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதற்கு மேலாக நம்முடைய செயல்கள் வேலைகள் அமையவேண்டும்.  கொஞ்சம் முன்னதாக, கொஞ்சம் கடினமாக, கொஞ்சம் நேரம்அதிகமாக கொடுத்து வேலைசெய்து பழகவேண்டும். நாம் பெரும் சம்பளத்திற்கு அதிகமாகவே நாம் வேலைசெய்து பழகவேண்டும். அப்படி செய்கின்றபோது நம்முடைய சுயமதிப்பு உயரும்.

நத்தானியேல் என்ற உளவியலாளர் சுயமதிப்பு என்பது உங்கள்மீது நீங்கள் வைத்திருக்கும் நற்பெயர் என்கிறார். அப்படியென்றால் நாம் செய்யும், செய்யாமல்விடும் ஒவ்வொரு செயலும் நம்முடைய சுயமதிப்பைப் பாதிக்கின்றது. சாதாரண மனிதர்கள் இது முடியாது என்று விட்டுச்செல்லும் இடத்தில், நம்மை நாமே இயக்கி புதியன செய்கிறபோது, நம்முடைய சுயமதிப்பு உயர்கிறது. 

சுயமதிப்பு நிறைவாயுள்ள வழிகாட்டியாக மாற, நாம் ஒவ்வொரு நாளையும் முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். இன்றைய நாள்தான் நம் கையில் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளவேண்டும். ஒரு வாரம் ஒரு தீவுக்கு உல்லாசப் பயணம் கூட்டிட்டுப் போறாங்க. முக்கியமான வேலையை இன்றைக்கே முடிக்கணும் என்று காலையில் ஒரு செய்தி கொடுக்கப்படுகிறது என்றால் என்ன செய்வீர்கள். உடனடியாக முக்கியமான வேலையில் இருந்து ஆரம்பித்து உயிரைக் கொடுத்து வேலைசெய்வோம். அதேபோலதான் நாம் செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் அப்படி ஒரு செய்தியை நினைத்து உருவாக்கிக்கொண்டால், நாம் தேக்கநிலையில் இல்லாமல், நிறைய வேலைகள் செய்வோம். சாதிப்போம். இலக்கை எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே அடைந்துவிடுவோம். வழிகாட்டிகளாக, தலைவர்களாக வாழ்வோம்.நாளை என்ற முனைப்போடு செயல்படவேண்டும். அதுதான் உண்மையும்கூட. ஒரு ஆய்வு எடுத்துக்கொள்வோம். 30 நாட்களுக்கு மின்சாரம் தண்ணீர் இருக்காது என்று சொன்னால் என்ன செய்வோம். அவ்வளவு முனைப்போடு செயல்படவேண்டும்.
 

Add new comment

6 + 4 =