சிகரம், ஒரு மூங்கில் மரம் 21: ஆழ்மனத்துடன் பேசலாமே

நம்முடைய எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகின்றது. நம்முடைய நம்பிக்கையின் மொத்தமே நம்முடைய எண்ணங்கள். நம்முடைய எண்ணங்கள் தெளிவாக இருந்தால், அதை மீண்டும் மீண்டும் அசைபோட்டால், நம் வாழ்க்கையில் நாம் நினைத்தபடி வாழலாம். இந்த சிந்தனையில் பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படை விவிலியத்;திலிருந்துதான் வந்திருக்கிறது. விவிலிய மாந்தர்களின் வாழ்க்கை அனுபவம் மட்டுமல்ல, சில அறிஞர்களின் ஆராய்ச்சி அனுபவங்களும் நம் கண்கூடு. இந்த சித்தாந்தத்தை விவிலியம் மூன்று விதிகள் கொண்டு விளக்குகிறது. 

முதல் விதி: 
மாற்கு 11:23: உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்.

இயேசு தனது அனுபவத்தின் வாயிலாக உறுதியாக நமக்கு சொல்கின்றார். நமது உள்ளத்தில் நாம் எதை விரும்புகின்றோமோ அது நமக்கு கிடைக்கும். நம் ஆழ்மனத்தில் தங்கியிருக்கும் கடவுள் நமக்காக நடத்திக் காட்டுவார் என்ற சந்தேகமில்லாத நம்பிக்கை நம்மிடம் இருக்கவேண்டும். அப்பொழுது எல்லாம் நல்லதாக நடைபெறும்.

இரண்டாம் விதி:
மாற்கு 11:24: நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.

நாம் கேட்பது, நினைத்தது நடந்துவிட்டது என்று நம்பவேண்டும். நாம் கேட்டதும் நினைத்தும் நடந்துவிட்டால் நாம் எந்த மகிழ்ச்சியை அனுபவிப்போமோ அந்த பெரும் மகிழ்ச்சியை இப்பொழுதே நாம் நம் உள்ளத்தின் ஆழத்தில் உணரவேண்டும். அதுவே நாம் கேட்பது கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கை.

மூன்றாம் விதி:
மாற்கு 11:25: நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும் போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.

நாம் கேட்பது கிடைப்பதற்கான சூழல் உருவாகிக்கொண்டிருக்கும்போது நமக்கு தடையாக இருப்பது நம்மிடம் இருக்கும் வெறுப்பு, கோபம். அப்படி நாம் பகையோடு இருந்தால் ஒரு வேளை அவர்களால் நமக்குவரவேண்டிய ஆசீர்வாதம் தடைபடும். எனவே நாம் பகையுணர்வினை களைதல் அவசியம்.

நீங்கள் செய்யவேண்டியது: 
இரவு உறங்குவதற்கு முன், அதாவது படுக்கையில் சாந்திருந்து தூங்க ஆரம்பிக்கின்றபோது. நீங்கள் விரும்பிய ஒன்றை நினைத்து, அது நிறைவேறுவதாகவும் அதன் சந்தோசத்தையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அப்படியே உறங்கிவிடவேண்டும். அடுத்த நாள் எழுந்தவுடன் பாடுக்கையிலேயே அதை சிந்திக்கவேண்டும். இந்த செயல்பாடு நீங்கள் நினைத்தவை நிறைவேறுவதற்கான சூழலை உருவாக்கிக்கொடுக்கும். நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் நினைப்பதற்கு எல்லைகளும் வரையறைகளும் கிடையாது. 

 

Add new comment

4 + 0 =