அன்பருடன் அதிகாலைத்துளிகள் - Prayer to God

எங்கள் உள்ளத்தில் உறைகின்ற அன்பே உருவான இறைவா, இந்த அருமையான இனிய நாளில் உம்மை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.  இந்த நாளை ஒரு கொடையாக எமக்குக் கொடுத்த உமது  மேலான கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த நாளின் ஒவ்வொரு மணித்துளியும் உமது திருக்கரத்தின் ஆசீர்வாதம்!  கோடான கோடி நன்றி! 

எங்களது சொல் செயல் சிந்தனையை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். எம்மை ஆசீர்வதித்து கரம்பிடித்து சரியான பாதையில் நடத்திச் செல்லும். எங்களது வாயிலிருந்து வரும் சொற்கள்   பிறரை ஆற்றி தேற்றி ஊக்குவித்து ஆலோசனை நல்கி பாராட்டி அன்பைப் பகிர்ந்து நல்லுறவை போற்றும் வண்ணம் அமைவதாக. 

இந்த நாள் இனிய நாளாக உறவைப் பேணும் வண்ணமாகவும் அமைய எம்மோடு இருந்து எம்மை வழிநடத்தும். நாளின் முடிவில் எங்கள் உள்ளங்களில் நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் திருப்தியும் அமைதியும் அன்பும் நிரம்பி வழிய வேண்டுமாய் உம்மிடம்  பிரார்த்திக்கிறோம். 

இந்நாளையும்   எங்களையும் எங்களது செயல் திட்டங்களையும் கனவுகளையும் எங்களைச்   சார்ந்தவர்களையும் நாங்கள் சந்திக்கவிருக்கும் நபர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமாய்  உன் பொற்பாதத்தில் எமது எளிய வேண்டுதல்களை சமர்ப்பிக்கிறோம். இந்த நாள் இனிய நாள் நாளாக அமைவதாக! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Add new comment

3 + 4 =