Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
செபமாலை | மாட்சியின் மறையுண்மைகள் | Glorious Mysteries Rosary
மாட்சியின் மறையுண்மைகள் (புதன், ஞாயிறு)
1. இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததைத் தியானிப்போமாக.
2. இயேசு விண்ணகம் சென்றதைத் தியானிப்போமாக.
3. புனித கன்னி மரியாமீதும் திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கிவந்ததைத் தியானிப்போமாக.
4. புனித கன்னி மரியா விண்ணகத்திற்கு எடுத்துச் கொள்ளப்பட்டதைத் தியானிப்போமாக.
5. புனித மரியா விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டதைத் தியானிப்போமாக.
நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே
புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும் உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.
முதன்மை வானதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, ரபேலே, திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே, நாங்கள் எத்துணைப் பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும் உங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம்.
மாதா மன்றாட்டுமாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிருஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கனிவுடன் கேட்டருளும்
விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா
உலகத்தை மீட்ட திரு மகனாகிய இறைவா
தூய ஆவியாராகிய இறைவா
தூய்மைமிகு மூவொரு இறைவா
புனித மரியே
இறைவனின் புனித அன்னையே
கன்னியருள் புனித கன்னியே
கிறிஸ்துவின் அன்னையே
திரு அவையின் அன்னையே
இறை அருளின் அன்னையே
தூய்மைமிகு அன்னையே
கன்னிமை குன்றா அன்னையே
மாசு இல்லா அன்னையே
பாவ கறை இல்லா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
வியப்புக்குரிய அன்னையே
நல்ல ஆலோசனையின் அன்னையே
படைத்தவரின் அன்னையே
மீட்பரின் அன்னையே
பேரறிவு மிகு கன்னியே
வணக்கத்திற்குரிய கன்னியே
போற்றுதற்குரிய கன்னியே
வல்லமையுள்ள கன்னியே
பரிவுள்ள கன்னியே
நம்பிக்குரிய கன்னியே
நீதியின் கண்ணாடியே
ஞானத்திற்கு உறைவிடமே
எங்கள் மகழ்ச்சியின் காரணமே
ஞானம் நிறைந்த பாத்திரமே
மாட்சிக்குரிய பாத்திரமே
பக்தி நிறைந்த பாத்திரமே
மறை பொருளின் ரோசா மலரே
தாவீது அரசரின் கோபுரமே
தந்தமாயாமான கோபுரமே
பொன்மாயாமான கோவிலே
உடன்படிக்கையின் பேழையே
விண்ணகத்தின் வாயிலே
விடியற்கால விண்மீனே
நோயுற்றோரின் ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
துயருறுவோருக்கு ஆறுதலே
கிறிஸ்தவர்களின் துணையே
வானதூதர்களின் அரசியே
முதுபெரும் தந்தையர்களின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சிகளின் அரசியே
இறையடியார்களின் அரசியே
கன்னியர்களின் அரசியே
அனைத்து புனிதர்களின் அரசியே
அமல உற்பவியான அரசியே
விண்ணேற்பு அடைந்த அரசியே
திருச்செபமாலையின் அரசியே
அமைதியின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
- எங்கள் பாவங்களை பொறுத்தருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
- எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறிய
- எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைவனின் புனித அன்னையே! இதோ உம் அடைக்கலம் நாடி வந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும். மாட்சிக்குரிய கன்னியே! விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே! அனைத்து துன்பங்களிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.
முதல்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
எல்: இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக:
இறைவா! முழு மனத்துடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தை கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
புனித கன்னி மரியாவை நோக்கி புனித பெர்னார்துவின் மன்றாட்டு
மிகவும் இரக்கமுள்ள தாயே / உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து / ஆதரவைத் தேடி / மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக / ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை / என்பதை நினைவு கூர்ந்தருளும். / கன்னியர்களின் அரசியான கன்னியே / நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை / என்னைத் தூண்டுவதால் / நான் உமது திருவடியை நாடி வருகிறேன். / பாவியாகிய நான் / உமது இரக்கத்திற்காக / துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கிறேன். / மனிதராகப் பிறந்த வார்த்தையின் தாயே / என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கனிவுடன் கேட்டருளும்.
பிறப்புநிலைப் பாவம் இன்றி கருவான புனித மரியே / பாவிகளுக்கு அடைக்கலமே / இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். / எங்கள் மீது இரக்கம் கொண்டு / எங்களுக்காக உம் திருமகனிடம் மன்றாடும். - ஆமென்.
Facebook: http://youtube.com/VeritasTamil
Twitter: http://twitter.com/VeritasTamil
Instagram: http://instagram.com/VeritasTamil
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website: http://www.RadioVeritasTamil.org
Blog: http://tamil.rvasia.org
**for non-commercial use only**
Add new comment