எசேக்கியேல் ரமின் | Ezechiele Ramin | October 13

இவரைப் பற்றி தெரிந்து கொள்ள இவர் சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. "உங்கள் குருவானவர் பேசுகிறேன். எனக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. அன்பு சகோதரரே சகோதிதிரியே என்  வாழ்க்கை உங்களுக்கு என்றால் என் மரணமும்  உங்களுக்காகத்தான்." இத்தாலியில் பதுவாவிலே 1953 பிப்ரவரி 9 இல்  பிறந்தவர். ஆறு பிள்ளைகளில் நான்காம் மகனாய் இருக்கின்றனர். இவரது குடும்பம் தன்னுடைய தேவைகளை சற்று கடினப்பட்டு நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய ஓர் நடுத்தர குடும்பமாய் இருந்தது. ஆயினும் பெற்றோரும் குடும்பமும் எல்லோருக்கும் முன்மாதிரியாய் இருந்தார்கள்.

அன்பான குடும்பம், நல்ல குடும்பம், குடும்பமாய் அவர்கள் ஜெபித்தர்கள். இதிலும் குறிப்பாக தாயாரின் ஆன்ம பயிற்சியும் தியாகமும் இந்த குடும்பத்தை தாங்கி வளர்த்தது. தினந்தோறும் செபங்களும்  திருப்பலியும்தான்  அவருடைய பலமாக இருந்தது. இதை கண்டு இவருடைய பிள்ளைகள் வளர்ந்தார்கள்.

இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பின்போதே  'திறந்த கரங்களில்' என்கின்ற குழுமத்தோடு சேர்ந்து மூன்றாம் உலக மக்களுக்கு என்று அங்கே இருக்கின்ற காகிதங்கள், கண்ணாடிகள் இரும்புகள் என பிறவற்றைக் கொண்டு புதிய பொருட்களை தயாரிக்கின்ற அல்லது அவற்றை உபயோகிக்க ஒரு பணியை செய்து கொண்டிருந்தார்.

மூன்றாம் உலகங்களை நோக்கியதாகவே இவருடைய பள்ளிப்பருவம் இருந்தது. அவர்கள் தேவை என்ன? அவர்களுக்கு என்ன வேண்டும்? என்பதை கண்ணும் கருத்துமாய் சிறுவயதிலிருந்தே அறிந்தவராகவே அவர் இருந்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவருடைய அழைத்தல் மிகவும் சுவாரசியமானது.

பள்ளிப் படிப்பை முடிக்கிற நேரத்திலேயே தந்தையானவர் மகனே நீ மேற்கொண்டு எங்கே? எந்த கல்லூரியில் படிக்க ஆசை படுகிறாய் என்று கேட்டதற்கு, வாருங்கள் என்று அவர்களை ஓர் மகிழ்வுந்தில் ஏற்றிக் கொண்டு நேராக ஒரு துறவற மடத்துக்கு வந்து நான் இங்கேதான் படிக்கப் போகிறேன் என்று ஆச்சரியப்படுத்தினார். ஏனென்றால் இது குறித்து அவருடைய பெற்றோரிடமும், நண்பர்களிடமும் அவர் விவாதித்ததுகூட இல்லை. சொல்லியது கூட இல்லை. அவருக்குள்ளாகவே கடவுள் தன்னை அழைக்கின்றார் குறிப்பாக மூன்றாம் உலக மக்களுக்காக பணியாற்ற தயார் என்று மனதுக்குள் அந்த எண்ணத்தை செயலாற்றி இருக்கின்றார் என்பதை நாம் பார்க்கின்றோம்.

இவருடைய சிறப்பு என்ன என்று பார்க்கின்ற பொழுது, எல்லாவற்றையுமே விவிலிய கண்ணோடு கண்ணோடு பார்ப்பது. எடுத்துக்காட்டாக அவரது  பள்ளிப்படிப்பு   நேரத்திலேயே இவ்வாறாக சொல்லுகின்றார், 'கிறிஸ்து இப்பொழுதும் எம்மாவுஸ் சாலையிலே நடந்து கொண்டிருக்கிறார். இந்த சாலையில் காண்கின்ற ஏழை சகோதரன், வயதானவர், தொழுநோயாளர், இலட்சக்கணக்கான பசியில் பாடுவோர், 6 இலட்சத்திற்கும் அதிகமான ஊட்டச்சத்து குறைபாடு இருக்கின்ற பிள்ளைகள் எல்லோருமே இயேசுவின் முகம்' என்று சொல்கின்றார்.

எல்லாவற்றையுமே விவிலிய கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர் என்று செல்வதற்கு இன்னொரு எடுத்துக்காட்டும் இருக்கின்றது. என்னவென்றால் ஒரு குருவானவர் இவரை அழைத்தலின் அறிமுக பகுதியில் இருக்கின்ற பொழுது நீங்கள் யோனாவிடம்  பேசுகின்றீர், எப்படி நினிவேக்குக்கு  செல்ல பயந்தாரோ அப்படியே நானும் என்று தன்னுடைய பயத்தைக்கூட விவிலியாக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்.

ஓர் துறவியாய் குருவானவராக நான் என்ன செய்யவேண்டும் என்றால் 'மகிழ்ச்சியை கொண்டு வரவேண்டும், மகிழ்ச்சியை கொண்டு வருவது இயேசுவை கொண்டுவருவது' என்று எல்லாவற்றையுமே விவிலிய கண்ணோட்டத்தோடு பார்த்ததை தெரிந்துகொள்ளலாம். 1972 செப்டம்பர் மாதத்தில் தன்னுடைய ஊரைவிட்டு கொம்போனி மறைபணி சபையில் சேர்ந்து 1976 மே 26 இல் தன்னுடைய வார்த்தைபப் பாட்டை கொடுத்து அதிலே உறுப்பினர் ஆகிறார்.

உகாண்டாவில் தன்னுடைய இறையியலை படிக்க அனுப்புகின்ற நேரத்திலே, அங்கே அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லாதனாலேயே அமெரிக்காவிலேயே தன்னுடைய  படிப்பை தொடங்குகின்றார். தன்னுடைய படிப்பு காலத்திலே கோடைவிடுமுறையில் வெர்ஜீனியா, ரிச்மண்ட் பகுதியில் இருக்கின்ற ஆபிரிக்க அமெரிக்க பணித்தளம்  ஒன்றில் தன்னுடைய  விடுமுறையை செலவழித்தார்.

அங்கே அவருக்கு ஏழ்மையின் முகம், 40 வயதானவர் கூட நான் என்ன செய்யவேண்டும் என்று ஏங்கி கேட்கின்ற ஒரு அர்த்தம், 13 வயதிலேயே கர்ப்பம் தரித்த குழந்தை என அங்கே சூழ்நிலைகளைப் பார்த்து வறுமை என்றால் என்ன? சூழ்நிலை என்றால் என்ன? என்பதை நன்கு அறிந்திருந்தார். அவர்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றவும் செய்தார்.

அங்கு அந்த அனுபவங்களை எல்லாம் ஒன்று திரட்டி பின்பு, 1984 ஜனவரி 20 இல் பிரேசில் நாட்டிற்கு செல்கின்றார். தன்னுடைய  கனவான மூன்றாம் உலகங்களுக்குச் சென்று பணியாற்றுவதை அங்கே தொடங்குகின்றார். அந்த நாட்டு சமூக சூழ்நிலை எவ்வாறாக இருந்தது என்றால், மக்களுடைய விளைநிலங்களை பெரும் முதலாளிகள் பிடுங்கிக்கொண்டு, அவர்கள் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாகப்பட்டதையும். என் நிலம் என்று ஏக்கத்தோடு சென்று உழுதவர்களை  கொல்லுகின்ற அளவுக்கு குண்டர்களை வைத்து மிரட்டிய சூழ்நிலையும் இருந்து கொண்டிருந்தது.

அவர் பணியாற்றிய தளம் அமேசான் லீகல் பகுதியிலே றொண்டோனியா பகுதியிலே காகோல் மறைபணி தளமாகும். அந்த மக்களுக்கு செவ்வனே இறை பணியை செய்து கொண்டிருந்தார். காலம் மாறியது இவருடைய இன்னொரு முகத்தை நமக்கு காட்டியது. இவ்வாறாக தன்னுடைய இறை பணியை செய்து கொண்டிருந்த பொழுது, ஓர் ஊருக்கு சென்ற பொழுது அங்கிருந்த பெண்கள் எல்லோருமே எங்கள் கணவர்களை அவர்கள் அந்த நிலத்தில் இருந்து வெளியேறுமாறு தயவுசெய்து கேட்டுக் கொள்ளுங்கள், ஏனென்றால் அவர்கள் அந்த நிலத்தை பிடுங்கப்பட்ட நிலத்தில் உழுது கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும் என்று சொல்ல கேட்டுக்கொண்டார்கள்.

ஏன் இப்படிச் சொன்னார்கள் என்றால், உங்களால் மாத்திரமே சொல்லமுடியும், அவர்களிடத்திலே இடத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று உங்களால் மட்டுமே சொல்லமுடியும், உங்களுக்கு மட்டுமே அந்த அதிகாரமும் பொறுப்பும் உணர்வு இருக்கின்றது. எங்கள் மீது அன்பு செலுத்துகின்றனர் நீர் மட்டுமே, நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் எனவே உங்களிடம் வேண்டுகின்றோம் என்று கேட்டுக் கொண்டதாக நாம் வாசிக்கின்றோம்.

இவர் சென்று சொல்லிய பின்பு அவர்கள் வந்து விட்டார்கள். ஆனால் சூழ்நிலையை அப்படியே விட்டு விட இவருக்கு மனமில்லை. சென்று தன் குழுமத்திலே நடந்தது சொல்ல அவர்கள் எல்லோருமாக சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்னவென்றால் மக்களுக்கு ஆதரவாக இருப்பது என்று. ஓர் குருவானவராக ஆன்மிக பலமாக இவர் மக்களுக்கு இருந்தார். மக்கள் எந்த வகையில் போராட வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லி அவர்களை வழிநடத்தியதை நாம் பார்க்கின்றோம்.

இப்படியாக மக்கள் தங்களுடைய எதிர்ப்பை பெருமுதலாளிகளுக்கு வெளிப்படுத்த ஓர் நகரத்திலே கூடி இருந்த பொழுது, 100 கிலோ மீட்டர் பயணம் செய்து அவர்களை சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அகிம்சையை விட்டுவிட வேண்டாம், வன்முறையில் இறங்க வேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் சொல்லிவிட்டு திரும்பி வருகின்ற பொழுது, அந்த பெரும் முதலாளிகளின் அடியாட்கள் இவருடைய வண்டியை வழிமறித்து, துப்பாக்கியால் சுடுகிறார்கள். அப்பொழுது கூட இவர் சொல்கிறார் நான் குருவானவர் வாருங்கள் பேசுவோம்  என்று சொல்லியதை கூட அவர்கள் காதில் கேட்காமல்,  75 குண்டுகள் துளைக்க தன் இடத்திலிருந்து 50 மீட்டர் தூரம் வரை, சுட்ட குண்டுகளால் தூக்கி எறியப்பட்டு அவர் இறந்ததை பார்க்கின்றோம். உடன் பயணித்த அவர் அங்கிருந்து தப்பிச் சென்று நடந்த சம்பவத்தை விவசாயிகளிடம் சொல்லி அவர்களை அழைத்து வந்து பார்க்கையில் அவர் இறந்துவிட்டார். அவருடைய மரணம் ஒரு பெரிய பாதிப்பை மக்களுக்கும் சபைக்கும் ஏற்படுத்தியதை  பார்க்கின்றோம்.

இவர் எப்பொழுதுமே சிலுவை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் சுடப்பட்டார் நேரத்திலேயே அந்த சிலுவையை  அவர்கள் பறித்து சென்று இருந்தார்கள். அந்த இடத்திலே ஒரு சிலுவை நடப்பட்டது அதையும் உடைக்கவே, இப்பொழுது எளிதில் தகர்க்க முடியாத அளவில் சிலுவை ஒன்று செய்து அங்கே வைக்கப்பட்டிருக்கின்றது. இவருடைய நற்செய்திப்பணி நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நாம் என்ன செய்யலாம்?

Add new comment

5 + 2 =