Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புனித வியாழன் 2020
ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் - யோவான் 13:14. ஆண்டவரின் இறுதி இராவுணவுப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாளின் மையமாக இருக்கும் வார்த்தைகள். பாதம் கழுவுதல், பணிவிடை செய்தல், அப்பம் பிட்குதல், அன்பு செய்தல்.
திருமுழுக்கு வழியாக நாம் அனைவருமே கிறிஸ்துவின் பணி வாழ்வில் பங்கேற்கிறோம். நம்மை ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ திருஅவை அழைக்கின்றது. பாதம் கழுவுதல் என்றால் இறங்கி வருதல் என்று பொருள். நாம் நம் உறவுகளில் ஒருவர் மற்றவருக்காக இன்று இறங்கி வருகிறோமா? குடும்ப உறவில் கணவன், மனைவியும் தங்களுக்குரியவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பிறருக்குரியவற்றில் அக்கறை செலுத்தும்போது அங்கே பணிவாழ்வும் பிறக்கிறது.
தனக்கு மதிப்பு தருவது இது என்று எதை ஒரு பணியாளர் நினைக்கிறாரோ அதை அவர் இழந்தால்தான் பணிசெய்ய முடியும். பணம், பட்டம், பதவி, பெருமை, ஆசைகள் என எதெல்லாம் அவருக்கு மதிப்பு தருகின்றதோ அதை அவர் கழற்றிவிட்டு துணியும்போதுதான் பணிவாழ்வு சாத்தியமாகும். இயேசு ஏற்படுத்துகின்ற குருத்துவம் இந்த நிகழ்விலிருந்துதான் ஊற்றெடுக்கின்றது. ‘நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன். நீங்களும் அது போல் செய்யுங்கள் என்று சீடர்கள் மூலமாக குருத்துவ பணியை தொடங்குகிறார்.
குருத்துவத்திற்கு அடிப்படையான ஒரு பண்பு உடனிருப்பு. இறைவனோடும், மக்களோடும் உடனிருக்கும் தன்மைதான் ஒருவரைக் குருவாக அடையாளம் காட்டுகின்றது. அடுத்து வாழ்நாள் முழுவதும் தன்னை மற்றவர்களுக்காக உடைத்த இயேசு நற்கருணையில் தன்னையே பிறருக்கு கொடுத்து அதை நிறைவு செய்கிறார். இயேசுவின் உணவு அவர் தருகின்ற கொடை. நற்கருணை நம்மை பக்தர்களாக அல்ல, சீடர்களாக மாற்ற வேண்டும். நம் வாழ்வில் நாம் ஒவ்வொரு முறை மற்றவர்களுக்குச் செய்யும் பிறரன்புப் பணிகளும் அருளடையாளங்களே!
அன்புக் கட்டளை. இறைவனிடமிருந்து அன்பைப் பெறுகின்ற நாம் அதை ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதே அன்புக் கட்டளையின் நோக்கம். நம்மை நாமே ஒடுக்குதலும், நம்மை நாமே வெறுப்பதும் அன்பல்ல. மாறாக நம்மை நாமாக ஏற்றுக்கொண்டு நம் வாழ்க்கையையும், நம் இலக்கையும் அமைத்து அதன் வழியாக ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் முன்னே கொண்டு வருவதே இயேசு இன்று கொடுக்கும் அன்புக்கட்டளை.
ஜெபம்: ஆண்டவரே, எங்கள் வாழ்வில் உம்மை பின்பற்றி பிறரை அன்பு செய்து, பணிவிடை புரிந்து, உம்மை எங்கள் வாழ்வில் பிரதிபலிக்க அருள் தாரும். நீர் எங்களுக்கு அருளிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் அனைவருக்கும் நல்ல உடல் உள்ள சுகம் கொடுத்து காத்தருளும். திரு அவையை தீங்கின்றி காத்தருளும். ஆமென்.
Add new comment