Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
என்னோடு தங்கும் ஆண்டவரே
தந்தை பியோவின் ஜெபம்
என்னோடு தங்கும் ஆண்டவரே,
உம்மை நான் மறவாதிருக்க நீர் என்னோடு பிரசன்னமாயிருப்பது அவசியம்.
எவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.
என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் நான் பலவீனன்.
அடிக்கடி நான் தவறி விழாதிருக்க உமது பலம் எனக்குத் தேவை. என்னோடு தங்கும் ஆண்டவரே, எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லையென்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை. என்னோடு தங்கும் ஆண்டவரே, நீரே என் ஒளி. என்னோடு நீர் இல்லையென்றால் நான் இருளில் வீழ்கிறேன். உமது சித்தம் எதுவெனெ எனக்குக் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே, உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே.
என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மை அதிகமாக நேசிக்கவும்,
எப்போதும் உம் உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். நான் உமக்குப் பிரமாணிக்கமாக இருக்க நீர் விரும்பினால் என்னோடு தங்கும் ஆண்டவரே,
ஏனெனில் எனது எளிய ஆன்மா உமக்கு ஆறுதல் தரும் இல்லமாக, ஒரு அன்புக் கூடாரமாக இருக்க ஆசிக்கிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே,
பொழுது சாய்கின்ற இந்த நாள் முடிகின்றது. கடந்து போகும் வாழ்விலே மரணமும் தீர்ப்பும் முடிவில்லா வாழ்வும் எதிர்நோக்கி நிற்கின்றன.
வழியில் நான் நின்று விடாதபடி எனது ஆற்றல் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அதற்கு நீர்தான் தேவை ஆண்டவரே. பொழுது சாய்ந்து, மரணமும் எதிர்நோக்கும் வேளையில் இருள், சோதனைகள், வறட்சி, சிலுவை, துன்பங்கள் அனைத்தையும் கண்டு அஞ்சுகிறேன்.
இருள் படரும் இவ்வேளையில் ஓ இயேசுவே நீர்தான் எனக்குத் தேவை. இன்று இரவு என்னோடு தங்கும் ஆண்டவரே, பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்த இவ்வாழ்வில் நீரே எனக்குத் தேவை. அப்பம் பிட்கையில் உம்மை சீடர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். நற்கருணைத் திருவிருந்து இருளை அகற்றும் ஒளியாகவும் என்னைப் பலப்படுத்தும் அமுதமாகவும்,
என் இதயத்தின் ஒப்பற்ற மகிழ்வாகவும் இருக்கும்படி உம்மை நான் கண்டுகொள்ளச் செய்தருளும். என்னோடு தங்கும் ஆண்டவரே,
இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லை என்றாலும்
உமது அன்பு, அருள் மூலமாக என்னோடு தங்கும்.
என்னோடு தங்கும் இயேசு ஆண்டவரே,
தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை.
ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்குத் தாரும். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு, உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.
Add new comment